திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் குப்பை கிடங்கு தீ கட்டுப்படுத்தப்பட்டது

திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் குப்பை கிடங்கு தீ கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.;

Update:2017-07-03 04:30 IST
திருச்சி,

திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் கடந்த 28-ந்தேதி மாலை திடீர் என தீப்பிடித்து எரிய தொடங்கியது. காற்று வேகமாக வீசியதால் சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கின் அனைத்து பகுதிகளுக்கும் தீ பரவியது. கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் 11 வாகனங்களை பயன்படுத்தினார்கள். தீயணைப்பு துறையை சேர்ந்த சுமார் 50 வீரர்கள் இரவு பகலாக போராடினார்கள். ஆனாலும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் 4 நாட்களாக தீ எரிந்து கொண்டே இருந்தது. இந்த தீ யினால் அந்த பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் வசித்த மக்கள் தங்களது வீடுகளை காலி செய்து விட்டு தற்காலிகமாக வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து சென்றனர்.

தீயணைப்பு துறை வாகனங்களின் மூலம் தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டதால் பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் புகைந்து கொண்டிருந்த குப்பைகளுக்கு இடையே புகுந்து தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதன் பலனாக ஐந்தாவது நாளான நேற்று இரவில் தீ ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும் சுற்று வட்டார பகுதிகளில் புகை பரவியதை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் முகத்தில் துணியை கட்டியபடியே நடமாடினார்கள்.

நேற்று இரவிலும் தீயை முற்றிலுமாக அணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. தீயணைப்பு வாகனங்களுக்கு தேவையான தண்ணீரை மாநகராட்சி லாரிகளில் அதிகாரிகள் கொண்டு சென்று நிரப்பிய வண்ணம் இருந்தனர். இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கூறுகையில் ‘குப்பை கிடங்கில் ஏற்பட்டுள்ள தீ கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. நாளை (இன்று) இரவுக்குள் ஒட்டுமொத்தமாக தீயணைப்பு பணிகள் முடிவுக்கு வந்து விடும். அதன் பின்னர் தான் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்கப்படும்’ என்றார்.

மேலும் செய்திகள்