அரசு ஆணை வெளியிடாவிட்டால் மாநிலம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தம்

அரசு ஆணை வெளியிடாவிட்டால் மாநிலம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்படும் என்று அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் கூறினார்.;

Update:2017-07-03 04:15 IST
நாகப்பட்டினம்,

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் பயிற்சி வகுப்பு மாவட்ட தலைவர் அந்துவன்சேரல் தலைமையில் நாகையில் நேற்று நடந்தது. நாகை மாவட்ட செயலாளர் அன்பழகன் வரவேற்றார். இதில் மாநில செயலாளர் பெரியசாமி பேசினார். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊதிய மாற்றக்குழுவை உடனே அமல்படுத்த வேண்டும். புது வாழ்வு திட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிய 1,200 ஊழியர்களை மீண்டும் பணி அமர்த்த வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாதம் ஊதியம் 110 விதிகளின் கீழ் சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவவரையற்ற வேலை நிறுத்தம்

இந்தநிலையில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை, அமைச்சர்கள் செங்கோட்டையன், உதயகுமார், சண்முகம் ஆகியோர் தலைமையிலான குழுவினர் அழைத்து பேசி விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தனர். எனவே வருகிற 17-ந்தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவடையும் நிலையில் அரசு ஊழியர்களிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தை அடிப்படையில் அரசு ஆணை வெளியிடப்பட வேண்டும். அவ்வாறு வெளியிடாவிட்டால் மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். முடிவில் மாவட்ட பொருளாளர் ராணி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்