பவானி அருகே நடந்த இரட்டை கொலை வழக்கு: கைத்துப்பாக்கியை விற்ற வங்கி காவலாளி கைது

பவானி அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் ரூ.1½ லட்சத்துக்கு துப்பாக்கியை விற்ற வங்கி காவலாளி கைது செய்யப்பட்டார்.;

Update:2017-07-04 04:30 IST

பவானி,

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த சித்தோடு அருகே உள்ள பசுவபட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 56). தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கோமதி தேவி (52). இவர்களுடைய மகன் சந்தோஷ்குமார் (26). மருந்து மொத்த வியாபாரம் செய்து வருகிறார். பழனிச்சாமியின் தாய் பாவாயி (80).

பழனிச்சாமிக்கும், சந்தோசுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சொத்து பிரிப்பது தொடர்பாக பழனிச்சாமிக்கும், சந்தோசுக்கும் இடையே கடந்த 29–ந் தேதி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சந்தோஷ்குமார் தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியால் பழனிச்சாமி மற்றும் பாவாயியை சுட்டு கொலை செய்தார். இந்த இரட்டை கொலை தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ்குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அவருடைய தாய் கோமதி தேவி ஆகியோரை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமாருக்கு எங்கிருந்து கைத்துப்பாக்கி கிடைத்தது? என விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், ‘ஈரோடு அருகே உள்ள வெள்ளோட்டை சேர்ந்தவர் மூர்த்தி (40). தனியார் வங்கியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த இவருடைய உறவினர் குழந்தைசாமி. இவர் ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இறப்பதற்கு முன்பு தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியை மூர்த்தியிடம் குழந்தைசாமி கொடுத்திருந்தார். அந்த துப்பாக்கியை மூர்த்தி பராமரித்து வந்தார்.

இந்த நிலையில் மூர்த்தி காவலாளியாக வேலை செய்து வரும் வங்கியில்தான் சந்தோஷ்குமார் கணக்கு வைத்திருந்தார். இதனால் அடிக்கடி வங்கிக்கு வந்து சென்றபோது மூர்த்திக்கும், சந்தோஷ்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இதை பயன்படுத்தி மூர்த்தியிடம் துப்பாக்கி எதுவும் இருக்குமா? என்று சந்தோஷ்குமார் கேட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து மூர்த்தி தான் பராமரித்து வந்த கைத்துப்பாக்கியை சந்தோஷ்குமாருக்கு ரூ.1½ லட்சத்துக்கு விலைபேசி விற்று உள்ளார். அதன்படி முதல் கட்டமாக மூர்த்திக்கு ரூ.25 ஆயிரத்தை சந்தோஷ்குமார் வழங்கி உள்ளார்,’ என தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்