குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தால் பாதிப்பு காதில் பூ சுற்றி வந்து மனு கொடுத்த கிராம மக்கள்
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தால் பாதிப்படுவதாக காதில் பூ சுற்றி வந்து கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.;
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர்நடராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர். ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு செயலாளர் கருணாமூர்த்தி தலைமையில் பனைக்குளம் ஊராட்சி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் காதில் பூ சுற்றி வந்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், கிருஷ்ணாபுரம் கிராம பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினால் கிராம மக்கள் பாதிக்கப்படுவதோடு, நிலத்தின் தன்மையும், சுற்றுப்புறச்சூழலும் பாதிக்கப்பட்டு வருவது தொடர்பாக புகார் அளித்து போராட்டங்கள் நடத்தியதன் தொடர்ச்சியாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதன் அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும், மேற்கண்ட நிலையம் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அந்த நிலையத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் அடையாளங்களை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கான கால அவகாசம் அதிகாரிகளால் அளிக்கப்பட்டு உடந்தையாக இருந்து வருகின்றனர். எனவே, உடனடியாக மீண்டும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வருகிற 12–ந் தேதி கிராம மக்கள் அனைவரும் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குடியேறும் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
பரமக்குடி தாலுகா பிடாரியனேந்தல் பகுதியை சேர்ந்த கண்ணகி மகளிர் மன்ற பெண்கள் ஏராளமானோர் காலி குடங்களுடன் வந்து, தங்கள் பகுதியில் தண்ணீர் விநியோகம் இல்லாததால் குடங்களுடன் பல கிலோமீட்டர் நடந்து சென்று ரூ.10 கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருவதாகவும், தண்ணீர் இல்லாமல் சிரமப்படுவதாகவும், உடனடியாக தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். பனைக்குளத்தை சேர்ந்தமாற்றுத்திறனாளிகள் அளித்த மனுவில், மாவட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இருந்தபோதிலும் எங்களுக்கான வசதிகள் எங்கும் செய்து கொடுக்கப்படவில்லை. வங்கிகள், திருமண மண்டபங்கள், கடைகள், சினிமா தியேட்டர்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், உணவகங்களில் சாய்வு தளங்கள் அமைக்கபடவில்லை. இதனால் நாங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
சித்தார்கோட்டை முஸ்லீம் தர்ம பரிபாலனசபை சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், நல்ல குடிநீர் ஆதாரம் உள்ள எங்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உப்பளத்தினால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், விவசாய நிலங்கள் அடியோடு பாதிக்கப்பட்டு சில நாட்களில் நாங்கள் தண்ணீருக்காக அவதிப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, உடனடியாக எங்கள் பகுதியில் அமைந்துள்ள அனைத்து உப்பளங்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று மனு கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.