மருத்துவ மாணவர் சேர்க்கையில் புதுவையிலும் 85 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஆலோசனை: நாராயணசாமி
மருத்துவ மாணவர் சேர்க்கையில் புதுவையிலும் 85 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஆலோசனை நாராயணசாமி தகவல்;
புதுச்சேரி,
சுதேசி தர்ஷன் திட்டத்தின்கீழ் புதுவையில் பாரம்பரிய சுற்றுலா வளர்ச்சிக்கு ரூ.120 கோடியும், ஆன்மிக சுற்றுலா திட்டத்துக்கு ரூ.150 கோடியும் வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இதுதொடர்பாக நானும், அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவும், அதிகாரிகளும் மத்திய சுற்றுலாத்துறை மந்திரியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தோம்.
அதைத்தொடர்ந்து மத்திய அரசு அதிகாரிகள் புதுவை வந்து இங்குள்ள பகுதிகளை பார்வையிட்டனர். அதனடிப்படையில் பாரம்பரிய சுற்றுலாவில் 7 திட்டங்களுக்கும், ஆன்மிக சுற்றுலாவில் 10 திட்டங்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளனர். அதாவது பாரம்பரிய சுற்றுலாவுக்கு ரூ.66.34 கோடி, ஆன்மிக சுற்றுலாவுக்கு ரூ.40.68 கோடி என மொத்தம் ரூ.107.02 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, உத்தரபிரதேசம் என பல்வேறு மாநிலங்களைக்காட்டிலும் புதுவைக்கு அதிகபட்சமாக நிதி பெறப்பட்டுள்ளது. பெரிய மாநிலங்களுக்குக்கூட ரூ.40 கோடிதான் நிதி கிடைத்துள்ளது. இத்தகைய வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியை 100 சதவீத மானியமாக மத்திய அரசு அளிக்கிறது.
இந்த திட்டங்களுக்கு முதல் தவணையாக ரூ.21.40 கோடி நிதி வந்துவிட்டது. இதன்மூலம் கடற்கரையை அழகுப்படுத்தும் பணி, உப்பளம், ராஜ்பவன் தொகுதிகளில் வீதிகளை புனரமைப்பது, கலாசார மையம் அமைப்பது, நேருவீதியை புனரமைப்பது, பெரிய வாய்க்காலை அழகுபடுத்துவது, சுற்றுலா பயணிகளுக்காக உடைகள் மாற்றும் அறைகள் அமைப்பது, திருக்காமீசுவரர் கோவில் மேம்பாடு, திருக்காமீசுவரர் கங்கைவராக நதீஸ்வரர் கோவில் மேம்பாடு, திருநள்ளாறு கோவில் குளம் புனரமைக்கும் பணி ஆகிய பணிகள் செயல்படுத்தப்பட்டுவ வருகிறது. புதுவை மாநிலத்தை சிறந்த சுற்றுலா தலமாக்குவதுதான் எங்கள் எண்ணம். இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
தமிழகத்தில் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி சட்டம் இயற்றி உள்ளனர். அதைப்போல் புதுவையிலும் நிறைவேற்றுவது தொடர்பாக ஆலோசித்துள்ளோம். இதுகுறித்து புதுவை சட்டத்துறையின் கருத்துகளை கேட்டு உள்ளோம்.
அதேபோல் எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை நிர்ணயிக்கக்கோரி கட்டணக்குழுவுக்கு கடந்த 23–ந்தேதி கடிதம் எழுதப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் மேலும் ஒரு கடிதம் எழுத உள்ளோம். இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.