செங்குன்றத்தில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை

சென்னை செங்குன்றத்தில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2017-07-05 04:30 IST
செங்குன்றம், 

சென்னை செங்குன்றம் பனையாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாலமோன் (வயது 24). பிரபல ரவுடி. வியாசர்பாடி ரவுடி பழனி, திருவொற்றியூர் ரவுடி மதன் ஆகியோர் கொலை வழக்கு, வழிப்பறி வழக்கு என பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளன.

சோழவரத்தில் வழிப்பறியில் ஈடுபட்டதாக 3 மாதத்துக்கு முன்பு சாலமோன் கைது செய்யப்பட்டார். பின்னர் ஒரு மாதத்துக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். அப்போது ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார்.

வெட்டிக்கொலை

இந்நிலையில் நேற்று இரவு செங்குன்றம் சோலையம்மன் நகர் மாதா கோவில் தெருவில் உள்ள தன் சகோதரி வீட்டுக்கு சாலமோன் வந்தார். பின்னர் அங்கிருந்து தன்னுடைய வீட்டுக்கு கிளம்ப தன் மோட்டார் சைக்கிளில் ஏறி அமர்ந்தார்.

அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் சாலமோனை சரமாரியாக அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த சாலமோன் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

போலீஸ் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலமோனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சாலமோன் பழிக்கு பழியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை மேற்கொண்டு உள்ளனர். மேலும் மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்