ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் மதுரை ரெயில்நிலைய உணவகங்களில் 2 விதமான விலை நிர்ணயம்
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் மதுரை ரெயில்நிலைய உணவகங்களில் 2 விதமான விலை நிர்ணயம் பயணிகள் கடும் அவதி;
மதுரை,
மத்தியில் ஆளும் பா.ஜ.க.அரசு பொதுமக்களை வாட்டி வதைக்கும் ஜி.எஸ்.டி வரிவிதி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், அன்றாடம் பயன்படுத்தப்படும் உணவுப்பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ரெயில்வே துறையும் இந்த வரியில் இருந்து தப்பவில்லை. உயர்வகுப்பு டிக்கெட்டுகளுக்கு 5 சதவீதம் வரியும், ரெயில்நிலையம் மற்றும் ரெயில்களில் விற்கப்படும் உணவுப்பொருட்களுக்கு 12 சதவீதம் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
இதில் உணவுப்பொருட்களுக்கு ஏற்கனவே 2 சதவீதம் மட்டுமே வாட் வரி வசூலிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ரெயில்கள் மற்றும் ரெயில்நிலையங்களில் வழக்கமாக விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி கிடையாது என்றும், பிற பொருள்களுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ரெயில்நிலையங்களில் விற்பனை செய்யப்படும் டீ, காபி, வடை, சைவ உணவு, அசைவ உணவு ஆகியவற்றின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. மதிய உணவை பொறுத்தமட்டில், 150 கிராம் சாதம், 100 கிராம் சப்பாத்தி, 150 கிராம் பருப்பு, 100 கிராம் காய்கறிகள், 100 கிராம் தயிர், ஊறுகாய் பாக்கெட், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 250 மில்லி ஆகியவற்றின் விலை ரூ.35 ஆகும்.
இந்த உணவை பொட்டலமாக கட்டி வாங்கினால் ரூ.40 வசூலிக்கப்படுகிறது. அசைவ உணவை பொறுத்தமட்டில், 150 கிராம் சாதம், 100 கிராம் சப்பாத்தி, 150 கிராம் பருப்பு, 2 அவித்த முட்டை, 100 கிராம் தயிர், ஊறுகாய் பாக்கெட், 250 மில்லி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆகியன ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது தவிர, உள்ள அனைத்து உணவுப்பொருட்களுக்கும் 12 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது. அதன்படி, ரூ.71க்கு விற்பனை செய்யப்பட்ட சிக்கன் பிரியாணி ரூ.79க்கும், ரூ.49க்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை பிரியாணி ரூ.54 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.12க்கு விற்பனை செய்யப்பட்ட சட்னி, சாம்பாருடன் கூடிய 50 கிராம் எடை கொண்ட 2 இட்லிக்கு ரூ.1.44 வரியாக வசூலிக்கப்படுகிறது.
ஆனால், ரூ.13.44 க்கு பதிலாக ரெயில் நிலையங்களில் ரூ.14 வசூலிக்கப்படுகிறது. 30 கிராம் எடை கொண்ட உளுந்த வடை 2–க்கு ரூ.1.92 வரியும், 40 கிராம் பருப்பு வடை 2–க்கு ரூ.1.92, 50 கிராம் உருளைக்கிழங்கு போண்டா 2–க்கு ரூ.1.44, 300 கிராம் எடையுள்ள வெஜிடபிள் பிரியாணிக்கு ரூ.5.04, 300 கிராம் புளியோதரைக்கு ரூ.2.40, லெமன் சாதத்துக்கு ரூ.2.16, தயிர் சாதத்துக்கு ரூ.2.04, சாம்பார் சாதத்துக்கு ரூ.2.28, ஆம்லெட்டுக்கு ரூ.2.64, அவித்த முட்டைக்கு ரூ.1.08 வரியாக வசூலிக்கப்படுகிறது.
ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்ட 300 கிராம் வெஜிடபிள் நூடுல்ஸ் ரூ.34க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.22க்கு விற்பனை செய்யப்பட்ட 250 மில்லி லெமன் ஜூஸ், பைனாப்பிள் ஜூஸ், கொடிமுந்திரி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், மேங்கோ ஜூஸ் தற்போது ரூ.25க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதில் சில்லறையாக வரும் தொகையை முழுமையாக்கும் போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக ரூ.5.04 வரித்தொகை ரூ.6 ஆக வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் வர்த்தகர்களுக்கு 96 பைசா வருமானமாக கிடைக்கிறது. இப்படி, ஒவ்வொரு பொருளிலும் கணிசமான ஒரு தொகை சில்லரையில் இருந்து கிடைத்து விடும்.
இது ஒருபுறமிருக்க, மதுரை ரெயில்நிலையத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சைவ உணவகத்தில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை தொடர்ந்து உணவுப்பொருட்களுக்கு பலமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு ஒரு டீயின் விலை ரூ.20 ஆகும். அதாவது ரெயில்நிலையத்தின் வட பகுதியில் உள்ள கடையில் 5 ரூபாய்க்கும், தென்பகுதியில் உள்ள இந்த கடையில் ரூ.20க்கும் டீ விற்பனை செய்யப்படுகிறது.
இட்லி, சட்னி ரூ.40க்கும், இட்லி, சட்னி, சாம்பார் ரூ.55க்கும் விற்கப்படுகிறது. சாம்பார், சட்னியுடன் கூடிய உளுந்தவடை ரூ.55க்கும், சாம்பார், சட்னி இல்லாத 2–பருப்பு வடைகள் ரூ.35க்கும், தக்காளி சாதம், லெமன் சாதம், சாம்பார் சாதம் ரூ.55க்கும், சிக்கன் பிரியாணி ரூ.90க்கும், சைவ சாப்பாடு ரூ.90க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
300 மில்லி சாத்துக்குடி ஜூஸ், ஆப்பிள் ஜூஸ் உள்ளிட்டவை ரூ.70க்கும், எலுமிச்சை ஜூஸ் ரூ.30க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.30 விலையுள்ள ஜனதா சாப்பாடும் இங்கு விற்பனை செய்யப்படுவதில்லை.
எனவே, மதுரை ரெயில்நிலையத்தில் ஒரே பிளாட்பாரத்தில் 2 விதமான உணவகங்கள், 2 விதமான விலையில் உணவுப்பொருட்களை விற்பனை செய்கின்றன. இதில் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ள உணவுபொருட்கள் என்ன, வரி இல்லாத உணவுப்பண்டங்கள் என்ன என்பதை விசாரித்த பின்னரே பயணிகள் உணவருந்த வேண்டும் என்ற குழப்பமான நிலையில் உள்ளனர்.
அதாவது, வரி இருக்கா, இல்லையா என்று பார்த்து, பார்த்து சாப்பிட வேண்டும். இது போன்ற கூத்துகள் ரெயில்நிலையங்களில் அரங்கேறி வருவது குறித்து பயணிகள் கவலையடைந்துள்ளனர்.