கோலார் தங்கவயல், மைசூரு இடைத்தேர்தல்: ஜனதாதளம்(எஸ்)வெற்றி

கோலார் தங்கவயல், மைசூருவில் நடந்த இடைத்தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி வெற்றி பெற்றது.;

Update:2017-07-06 02:30 IST

கோலார் தங்கவயல்,

கோலார் தங்கவயல், மைசூருவில் நடந்த இடைத்தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி வெற்றி பெற்றது.

இடைத்தேர்தல்

கோலார் தங்கவயல் 21–வது வார்டு கட்டாரிபாளையாவில் இடைத்தேர்தல் கடந்த 2–ந் தேதி நடந்தது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ரமேஷ், ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் மோகன் பிரசாத், பா.ஜனதா சார்பில் யாரன் பாபாவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்.

இந்த தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்கு வசதியாக 4 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. கட்டாரிபாளையா வார்டில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 974 ஆகும். ஆனால் தேர்தலின் போது 2 ஆயிரத்து 051 பேர் தான் ஓட்டு போட்டனர். வாக்கு எண்ணிக்கை 5–ந் தேதி(அதாவது நேற்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஜனதாதளம்(எஸ்) வெற்றி

அதன்படி நேற்று கோலார் மாவட்ட ஜூனியர் கல்லூரியில் வைத்து வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளர் மோகன் பிரசாத் 1,069 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் 911 ஓட்டுகள் பெற்றார். பா.ஜனதா டெபாசிட் இழந்தது.

இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளர் மோகன் பிரசாத்துக்கு முன்னாள் மந்திரி சீனிவாசகவுடா மாலை அணிவித்து பாராட்டினார்.

மைசூருவில்....

இதேப்போல் மைசூரு மாநகராட்சியில் காலியாக உள்ள 32–வது வார்டு ஒண்டிகொப்பவிலும் நேற்று இடைத்தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளர் மஞ்சு 2 ஆயிரத்து 426 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் மாதேஷ் 2 ஆயிரத்து 117 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் பிரகாஷ் 329 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார்.

சுயேச்சை வேட்பாளர் மங்களகவுரி 12 வாக்குகளும், பால்ராஜ் 17 வாக்குகளும் பெற்றனர். 24 நோட்டா ஓட்டுகள் பதிவாகி இருந்தன. இந்த 2 இடங்களிலும் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும், ஜனதாதளம்(எஸ்) தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் செய்திகள்