புனே அருகே பயங்கரம் ரூ.5 லட்சத்திற்காக சிறுமி கடத்தி கொலை எரிந்த நிலையில் உடல் மீட்பு; 2 பேர் கைது
புனே அருகே ரூ.5 லட்சத்திற்காக சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்டாள். எரிந்த நிலையில் அவளது உடல் மீட்கப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
புனே,
புனே அருகே ரூ.5 லட்சத்திற்காக சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்டாள். எரிந்த நிலையில் அவளது உடல் மீட்கப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிறுமி மாயம்புனே மாவட்டம் அலான்டி சார்கோலி பகுதியை சேர்ந்தவர் அமோல். மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு 4 வயதில் தன்ஷிகா என்ற மகள் இருந்தாள். கடந்த 28–ந்தேதி வீட்டு அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமி தன்ஷிகா திடீரென காணாமல் போய் விட்டாள்.
பெற்றோர் எங்கு தேடியும் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அமோல், டிகி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
வாலிபரிடம் விசாரணைஅமோலுக்கு சொந்தமான வீட்டில் அகோலா மாவட்டம் முர்திஷாபூரை சேர்ந்த பெண் ஒருவர் தனது 2 மகள்களுடன் வாடகைக்கு தங்கியிருக்கிறார். அந்த பெண்ணின் மகன் சுபம் ஜாம்னிக் (வயது21) என்பவர் அவ்வப்போது தாய், சகோதரிகளை பார்க்க வந்து செல்வார்.
கடந்த 28–ந்தேதி வழக்கம் போல அவர் முர்திஷாபூரில் இருந்து தாயை பார்க்க வந்து சென்றிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. எனவே போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
சதி திட்டம்இதில், சிறுமி தன்ஷிகாவை அவர் கடத்தி கொலை செய்து, உடலை எரித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:–
சுபம் ஜாம்னிக் பலரிடம் இருந்து ரூ.5 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளார். கடன் கொடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்த முடியாமல் திணறி வந்தார். இதனால் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டினார். அமோல் மளிகைக்கடை நடத்தி வருவதால் அவரிடம் அதிக பணம் இருப்பதாக கருதினார்.
இதனையடுத்து அவரை மிரட்டி பணம் பறிப்பதற்காக சிறுமி தன்ஷிகாவை கடத்த டிகியை சேர்ந்த தனது நண்பர் பிரதிக் சாதலே (21) என்பவருடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டினார்.
சிறுமி கொலைஅதன்படி சம்பவத்தன்று நண்பர் பிரதிக் சாதலேயுடன் சார்கோலி வந்து தனது தாயை பார்த்தார். அந்த நேரத்தில் வீட்டருகே சிறுமி தன்ஷிகா தனியாக விளையாடிக்கொண்டிருந்தாள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவளை பிரதிக் சாதலே தனது வீட்டிற்கு கடத்திச்சென்றார்.
பணம் கிடைத்த பிறகு அவளை விட்டால் தங்களை சிறுமி காட்டி கொடுத்து விடுவாள் என பயந்து போன இருவரும், அங்கு வைத்து சிறுமியை தலையணையால் மூச்சை திணறடித்து கொலை செய்தனர். பின்னர் உடலை காரில் 520 கி.மீ. தொலைவில் உள்ள முர்திஷாபூருக்கு கொண்டு சென்று அங்குள்ள காட்டுப்பகுதியில் தீ வைத்து எரித்தனர்.
கைதுஇதன்பின்னர் இருவரும் தன்ஷிகாவை கடத்தி வைத்திருப்பதாக அமோலுக்கு போன் செய்து, மிரட்டல் விடுக்க தயாராகி கொண்டிருந்தனர். அதற்குள் போலீசார் நடத்திய விசாரணையில், சுபம் ஜாம்னிக் சிக்கிக்கொண்டார். இதையடுத்து போலீசார் சுபம் ஜாம்னிக்கை கைது செய்தனர். மேலும் சிறுமியை கடத்தி கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் பிரதிக் சாதலேவும் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே போலீசார் அகோலா சென்று பாதி எரிந்த நிலையில் கிடந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.