பவானிசாகர் அணையில் இருந்து காவிரிக்கு தண்ணீர் திறப்பதை நிறுத்தக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பவானிசாகர் அணையில் இருந்து காவிரி ஆற்றுக்கு தண்ணீர் திறப்பதை நிறுத்தக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
டி.என்.பாளையம்,
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து காவிரி ஆற்றுக்கு குடிநீருக்காக பவானி ஆற்றில் 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் கொடிவேரி, பவானி கூடுதுறை வழியாக காவிரி ஆற்றுக்கு சென்றடைகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.என்.பாளையம் பகுதி விவசாயிகள் கள்ளிப்பட்டி பவானி ஆற்றின் கரையோரம், நேற்று பகல் 11.30 மணி அளவில் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன சபை தலைவர் சுபி தளபதி மற்றும் கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க தலைவர் காசியண்ணன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் சத்தி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, பங்களாப்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் 100–க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
அப்போது விவசாயிகள் ஆற்றில் இறங்கி போராட முயன்றனர். உடனே விவசாயிகளை போலீசார் கயிறு கட்டி தடுத்து நிறுத்தினர். அப்போது விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து விவசாயிகள் ஆற்றின் கரையில் நின்றுகொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள். அப்போது விவசாயி ஒருவர் மட்டும் ஆற்றில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறும்போது, ‘தடப்பள்ளி–அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்கால்களில் தண்ணீர் இல்லை. இதனால் பயிர்கள் கருகுகிறது. தற்போது பவானிசாகர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரை நாமக்கல், கரூர் மாவட்டங்களை சேர்ந்த தனியார் ஆலை நிர்வாகத்தினர் மின்மோட்டார் வைத்து உறிஞ்சுகின்றனர்.விவசாயிகளான நாங்கள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை விலை கொடுத்து தண்ணீரை வாங்கி பயிர்களுக்கு பாய்ச்சி வருகிறோம். அதனால் பவானிசாகர் அணையில் இருந்து காவிரி ஆற்றுக்கு திறந்துவிடப்படும் தண்ணீரை நிறுத்த வேண்டும்‘ என்றார்கள்.
இதைத்தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.