சங்கரன்கோவிலில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
சங்கரன்கோவிலில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.;
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவிலில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
டாஸ்மாக் கடைநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பாரதியார் தெரு இலவன்குளம் ரோட்டில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை அருகில் நகரசபை நடுநிலைப்பள்ளி, தனியார் நர்சரி பள்ளி உள்ளது. டாஸ்மாக் கடை அருகில் ரேஷன்கடையும் உள்ளது. இந்த பகுதியானது எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும்.
இங்குள்ள டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. அதாவது மதுகுடித்துவிட்டு போதையில் அலங்கோலமாக ஆங்காங்கே கிடப்பதும், அவதூறான வார்த்தைகளை பேசுவதும் அந்த வழியாக செல்வோரை முகம் சுளிக்க வைக்கிறது.
முற்றுகை போராட்டம்இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கூறி டாஸ்மாக் கடையை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது. இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன், தாலுகா செயலாளர் அசோக்ராஜ், விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் பால்சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், கிறிஸ்தவ ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் தம்பி சேவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தள்ளுமுள்ளுஅப்போது போலீசாருக்கும், முற்றுகையில் ஈடுபட்டவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பொதுமக்கள் டாஸ்மாக் கடை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், மண்டல துணை தாசில்தார் மைதீன்பட்டாணி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். மாவட்ட கலெக்டர் மூலம் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.