சென்னை–பெங்களூரு–சித்ரதுர்கா பொருளாதார சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த ரூ.400 கோடி ஒதுக்கீடு
சென்னை–பெங்களூரு–சித்ரதுர்கா பொருளாதார சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த ரூ.400 கோடி ஒதுக்க கர்நாடக மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.;
பெங்களூரு,
சென்னை–பெங்களூரு–சித்ரதுர்கா பொருளாதார சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த ரூ.400 கோடி ஒதுக்க கர்நாடக மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.
மந்திரிசபை கூட்டம்கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:–
கர்நாடகத்தில் பருவமழை ஜூன் மாதம் வரை வழக்கத்தை விட குறைவாக பெய்துள்ளது. இதனால் காவிரி மற்றும் துங்கபத்ரா படுகையில் செயற்கை மழையை பெய்விக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 60 நாட்களுக்குள் செயற்கை மழை பெய்விப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் மூலம் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
ரூ.400 கோடி ஒதுக்க ஒப்புதல்சென்னை–பெங்களூரு–சித்ரதுர்கா பொருளாதார சாலை அமைக்கும் திட்டத்திற்கு துமகூருவில் வசந்தநரசாபுரத்தில் 4–வது ஸ்டேஜ் நிலம் கையகப்படுத்துவதற்கு ரூ.400 கோடி ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மொத்தம் ரூ.50 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்யப்படுகிறது. 2.20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும் ஏற்றுமதி திறனும் அதிகரிக்கும்.
பெங்களூருவில் வருகிற அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் இலவச பால் வழங்கும் திட்டம் வாரத்தில் 5 நாட்களும் அமல்படுத்தப்படும். இந்த மாதம் முதலே இது செயல்படுத்தப்படுகிறது. இதற்கு அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.285 கோடி நிதிச்சுமை ஏற்படும்.
கட்டுமான தொழில் கட்டுப்பாடு சட்டம்பள்ளிகளில் சமையல்காரர், உதவி சமையல்காரர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் ரூ.300 உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள கட்டுமான தொழில் கட்டுப்பாட்டு சட்டத்தை(ரியல் எஸ்டேட் சட்டம்) அமல்படுத்த மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும்.
தற்போது 60 சதவீத கட்டுமான பணிகள் முடிவடைந்த திட்டங்களுக்கு இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 206 சமுதாய சுகாதார மையங்கள், 2,353 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.13.78 கோடி செலவில் மின்னணு மருத்துவமனை திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.150 கோடியில் உயர்பல்நோக்கு மருத்துவமனைகள்ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் 150 சுகாதார விரிவாக்க மையங்கள் ரூ.15 கோடி செலவில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள சஞ்சய்காந்தி விபத்து மற்றும் மூட்டு சிகிச்சை ஆஸ்பத்திரியில் 10 படுக்கைகளை கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தாவணகெரே, கனகபுரா, துமகூரு, விஜயாப்புரா மற்றும் கோலாரில் உள்ள அரசு மருத்துவமனைகள் அரசு மற்றும் தனியார் கூட்டு பங்களிப்பில் 150 முதல் 200 படுக்கைகள் கொண்ட உயர்பல்நோக்கு மருத்துவமனைகளாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உப்பள்ளியில் உள்ள மாநில மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் பல்லாரியில் உள்ள விஜயநகர் மருத்துவ அறிவியல் நிறுவன வளாகங்களில் உயர்பல்நோக்கு மருத்துவமனைகள் ரூ.150 கோடி செலவில் அமைக்கப்படும்.
ரூ.13.61 கோடியில் குடிநீர் திட்டம்பட்டுநூல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நூற்பாலர்களுக்கு பூஜ்ஜிய வட்டியில் கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோலார் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள ரூ.5.91 கோடி ஒதுக்கப்படும். மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகாவில் 41 கிராமங்களுக்கு குடிநீர் வழங்க ரூ.13.61 கோடியில் குடிநீர் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கெம்பேகவுடா வளர்ச்சி ஆணையம் அமைக்க மாகடி ரோட்டில் 5.23 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும். அரசின் சமூக நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் விடுதிகளுக்கு ரூ.71 கோடி செலவில் மெத்தை, தலையணை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மண்டியா மாவட்டம் நாகமங்கலா தாலுகாவில் உள்ள பெல்லூரி கிராம பஞ்சாயத்து பட்டண பஞ்சாயத்தாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு ஜெயச்சந்திரா கூறினார்.