சங்கமங்கலம் அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு
நாகையை அடுத்த சங்கமங்கலத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.;
நாகப்பட்டினம்,
நாகையை அடுத்த சங்கமங்கலத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளை பார்வையிட்டார். பின்னர், குழந்தைகளுக்கு வழங்க தயாரிக்கப்பட்ட உணவினை சாப்பிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
நாகை மாவட்டத்தில் 1,150 முதன்மை மையங்கள் மற்றும் 175 குறு மையங்கள் உள்பட 1,325 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் 2 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் மொத்தம் 25 ஆயிரத்து 694 பேரும், 1 முதல் 2 வயது வரையுள்ள 10 ஆயிரத்து 548 குழந்தைகளும் என மொத்தம் 36 ஆயிரத்து 242 குழந்தைகள் பயின்று வருகின்றனர். அங்கன்வாடி மையங்களில் தமிழக அரசு சார்பில் முன்பருவ கல்வி, இணை உணவு மற்றும் மதிய உணவு ஆகியவையும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இணை உணவும் வழங்கப்படுகின்றன. வளர் இளம் பெண்களுக்கு ஆண்டுதோறும் வட்டாரத்திற்கு 30 நபர்கள் வீதம் 12 வட்டாரங்களிலும் தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.
அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு தக்காளி சாதம், கலவை சாதம் உள்பட பல்வேறு வகையான சாதங்கள் வழங்கப்படுகின்றன. தமிழக அரசின் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ் 27 ஆயிரத்து 171 குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவானது தரமானதாகவும், சுவையானதாகவும் இருக்க வேண்டும். மேலும் குழந்தைகளின் வருகை குறைவாக உள்ள அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் காப்பாளர்களிடம் உரிய விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.