ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் மீது நடந்த கத்திக்குத்து சம்பவத்தை கண்டித்து இந்து அமைப்பினர் போராட்டம்

பண்ட்வால் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் மீது நடந்த கத்திக்குத்து சம்பவத்தை கண்டித்து அந்த பகுதியில் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.;

Update:2017-07-08 02:00 IST

மங்களூரு,

பண்ட்வால் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் மீது நடந்த கத்திக்குத்து சம்பவத்தை கண்டித்து அந்த பகுதியில் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். 144 தடை உத்தரவை மீறி நடந்த இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா சஜிபமூடா கிராமம் கந்தூர் பகுதியை சேர்ந்தவர் சரத்(வயது 30). ஆர்.எஸ்.எஸ். பிரமுகர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரை கொலை செய்யும் நோக்கத்தில், யாரோ மர்ம நபர்கள் 2 பேர் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த சரத்தை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ட்வால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

144 தடை உத்தரவு

முன்னதாக பண்ட்வால் அருகே கல்லடுக்கா பகுதியில் இருபிரிவினருக்கு இடையே நடந்த கோஷ்டி மோதல் சம்பவம் நடந்தது. மேலும் கெஞ்சனபதவு பகுதியில் ஆட்டோ டிரைவர் ஒருவர் கொல்லப்பட்டார். தொடர்ந்து அந்த பகுதிகளில் பதற்றம் நிலவியதால் கடந்த 26–ந் தேதி முதல் பண்ட்வால், சுள்ளியா, புத்தூர், பெல்தங்கடி ஆகிய 4 தாலுகாக்களிலும் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து வருகிற 13–ந் தேதி வரை 144 தடை உத்தரவை நீட்டித்து போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் மீது தாக்குதல் நடைபெற்றதை கண்டித்து இந்து அமைப்புகள் நேற்று பண்ட்வால் டவுன் பகுதியில் கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.

தடையை மீறி போராட்டம்

ஆனால் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் இந்த கடை அடைப்பு போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் நேற்று தடையை மீறி பண்ட்வால் தாலுகா பி.சி.ரோடு பஸ் நிலையம் அருகே இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் பா.ஜனதா கட்சியின் எம்.பி.க்கள் ஷோபா, நளின்குமார் கட்டீல் உள்பட இந்து அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள், ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக போலீசார் கைது செய்யவேண்டும் என்று கோ‌ஷம் எழுப்பினர். 144 தடை உத்தரவை மீறி நடைபெற்ற இந்த போராட்டத்தை தொடர்ந்து எம்.பி.க்கள் ஷோபா, நளின்குமார் கட்டீல் உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த போராட்டத்தின் போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. ஹரிசேகரன், தட்சிண கன்னடா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதிர்குமார் ரெட்டி ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதிர்குமார் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:–

6 தனிப்படைகள்

ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சரத் மீது தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 3 தனிப்படைகள் மங்களூரு மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், மீதமுள்ள 3 தனிப்படைகள் மாவட்டத்தில் வெவ்வேறு பகுதியிலும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சரத் மீது தாக்குதல் நடத்தியவர்களின் உருவம் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

ஆனால் அதில் அவர்களின் முகங்கள் தெளிவாக பதிவாகவில்லை. அந்த கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடுதல் போலீஸ் குவிப்பு

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், சரத் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் 20 பேருக்கு தொடர்பு உள்ளதாக தெரிய வந்து உள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் தாக்குதலுக்கு உள்ளான சரத் தற்போது உடல் நிலை தேறிவருகிறார். எனினும் மாவட்டத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே சிவமொக்கா, சிக்கமகளூரு, மைசூரு, ஹாவேரி, தாவணகெரே, குடகு ஆகிய மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்த 12 குழுக்களும், மத்திய ஆயுதப்படையை சேர்ந்த 100 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்