தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் மனு

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஒரு தொடக்கப்பள்ளிக்கு போதிய கட்டிட வசதியில்லாததால் மாணவர்கள் மண் தரையில் அமர்ந்து படிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம இளைஞர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.;

Update:2017-07-11 04:30 IST
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் பொதுமக்கள் நேரடியாக மனு கொடுத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் வீரமநல்லூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் போதிய இட வசதி இல்லாததால் மரத்தடியில் அமர்ந்து மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாணவர்களும் மண் தரையில் அமர்ந்து பாடம் படிக்கின்றனர். இதனால் பள்ளியில் மாணவர் சேர்க்கை கணிசமாக குறைய வாய்ப்பிருக்கிறது. எனவே மாணவ, மாணவிகளின் நலன் கருதி இந்த பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் வருகிற ஊராட்சி மன்ற தேர்தலில் வாக்குப்பதிவினை இங்கு நடத்துவதற்கும் ஏதுவாக இருக்கும் என்று கூறியிருந்தனர்.

திருவாலந்துறை கிராமம் தேர்முட்டி பகுதியில் சிலர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து மது விற்பனையில் ஈடுபடுகின்றனர். இங்கு மது குடிப்போரால் தங்களுக்கு இடையூறு ஏற்படுமோ? என எண்ணி பள்ளி-கல்லூரி மாணவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் அவ்வழியாக செல்வதற்கே அச்சப்படுகின்றனர். இதுகுறித்து வி.களத்தூர் போலீசில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே மதுவிற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாலந்துறை கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் மனு கொடுத்திருந்தனர்.

பெரம்பலூர் மாவட்ட கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தினர் அளித்த மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக கறிக்கோழி பண்ணை அமைக்க தகுதியுடையோரை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த திட்டம் சிறப்பாக செயல்பட ஒழுங்கு நடவடிக்கை மற்றும் வளர்ச்சிக்குழு ஒன்றை உருவாக்கிட வேண்டும். இக்குழு மாவட்ட கலெக்டர் தலைமையில் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள், கால்நடைத்துறை மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளை உறுப்பினர்களாக கொண்டு செயல்பட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரை சேர்ந்த சலவை தொழிலாளர்கள் அளித்த மனுவில், எங்களுக்கு இலவச சலவைப்பெட்டி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தள்ளு வண்டி வாங்குவதற்கு வங்கி மூலம் கடன் பெற்று தர வேண்டும். காலம் காலமாக குரும்பலூரில் குடியிருந்து வரும் எங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் ஜே.ஜே.காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள தெருக்குழாயில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சரிவர குடிநீர் வருவதில்லை. இதனால் நாங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். எனவே எங்கள் பகுதியில் காவிரிக்குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினையை போக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.

இதில் வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்