சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் கோஷ்டி மோதல்; கார் கண்ணாடி உடைப்பு

சிதம்பரத்தில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் கட்சி நிர்வாகி ஒருவரது கார் கண்ணாடியை உடைத்தனர்.;

Update:2017-07-12 04:30 IST
புவனகிரி,

சிதம்பரத்தில் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அமைப்பு தேர்தல் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் விஜயசுந்தரம் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் செந்தில்குமார், மாநில விவசாய அணி தலைவர் வினோபா, வட்டார தலைவர் புவனேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் நகர தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார்.

கூட்டத்தில், கட்சியின் மாநில தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான பாப்பிராஜ், மாநில துணை தேர்தல் பொறுப்பாளர் செல்வம், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் பொன்கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்.பி. டாக்டர் வள்ளல்பெருமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஜெகநாதன், விஸ்வநாதன், பாலசுந்தரம், கந்தசாமி, ஆறுமுகம், சத்தியமூர்த்தி, சேதுமாதவன், கஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து, 11.15 மணிக்கு கட்சியின் மாநில எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு நிர்வாகி மணிரத்தினம் தனது ஆதரவாளர்கள் 100 பேருடன் கூட்டம் நடைபெற்ற தனியார் ஓட்டலுக்கு வந்தார்.

பின்னர், அவர் மேடையில் ஏறி, அங்கிருந்த மாநில நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அவர் மேடையில் இருந்த மாவட்ட தலைவர் விஜயசுந்தரத்திடம், ஏன் இந்த கூட்டத்திற்கு என்னை அழைக்கவில்லை என்று கேட்டார். ஆனால், அதற்கு அவர் பதில் எதுவும் கூறவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில், மணிரத்தினம் திடீரென மேடையில் இருந்த மைக்கை பிடித்து பேச தொடங்கினார். அவர் பேசும் போது, நாங்கள் கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்க 20 ஆயிரம் விண்ணப்பங்கள் வாங்கி, அதிகளவில் உறுப்பினர்களை சேர்த்து வருகிறோம். ஆனால், மாவட்ட தலைவர் இந்த கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதுபோன்ற பல கூட்டங்களுக்கு தகவல் கொடுப்பதில்லை என்றார்.

இவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட தலைவர் விஜயசுந்தரத்தின் ஆதரவாளர்களும், அங்கிருந்த நிர்வாகிகள் சிலரும் எழுந்து கோஷமிட்டனர். பதிலுக்கு மணிரத்தினத்தின் ஆதரவாளர்களும் கோஷமிட்டனர். இரு கோஷ்டியினரும் பதிலுக்கு பதில் திட்டி, கோஷமிட்டதால் கூட்டம் நடைபெற்ற இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மணிரத்தினம் தனது ஆதரவாளர்களுடன் கூட்டம் நடைபெற்ற அரங்கை விட்டு வெளியே வந்தார்


இதற்கிடையே கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. கூட்டத்தில் இருந்து மாநில துணை தலைவர் செந்தில்குமார் மற்றும் சில நிர்வாகிகளும், அவர்களது ஆதரவாளர்களும் வெளிவந்தனர்.

அப்போது, கூட்டம் நடைபெற்ற அரங்கிற்கு வெளியே இருந்த மணிரத்தினம் ஆதரவாளர்களுக்கும், மாவட்ட தலைவர் விஜயசுந்தரம் ஆதரவாளர்களுக்கும் இடையே மீண்டும் வாய்தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு ஒருகட்டத்தில் முற்றி, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அந்த இடமே போர்க் களமாக மாறியது.

இதற்கிடையே மணிரத்தினத்தின் ஆதரவாளர்கள் சிலர் ஒன்று சேர்ந்து, மாநில துணை தலைவர் செந்தில்குமாரை கீழே தள்ளிவிட்டு, அவரது சட்டையை கிழித்தனர். இதில் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் மணிரத்தினத்தின் காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். மேலும், கார் மீது கல்வீசி தாக்கினர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு கோஷ்டியினரையும் சமாதானப்படுத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இதனிடையே மதியம் 1 மணிக்கு கூட்டம் முடிந்தவுடன் மாநில நிர்வாகி பாப்பிராஜ் போலீஸ் பாதுகாப்போடு காரில் அனுப்பி வைக்கப்பட்டார்.

அப்போது, மணிரத்தினம் கோஷ்டியினர், மாநில தேர்தல் பொறுப்பாளர் பாப்பிராஜ் காரை வழிமறித்து, கார் கண்ணாடியை உடைத்த சம்பவம் பற்றி தெரிவித்தனர். தொடர்ந்து அவர் காரில் இருந்து இறங்கி சேதமடைந்த மணிரத்தினத்தின் காரை பார்வையிட்ட பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பின்னர் மணிரத்தினம் கோஷ்டியினர் சாலை மறியலில் ஈடுபட்டு, காரை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷமிட்டனர். சிறிது நேரம் கழித்து அவர்கள் கலைந்து சென்றனர்.

முன்னதாக கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு அனைவரும் பாடுபட வேண்டும், புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்