தாளவாடி அருகே சிறுத்தைதோல் விற்க முயன்ற வாலிபர் கைது

தாளவாடி அருகே உள்ள திகினாரை பகுதியில் சிறுத்தை தோலை ஒருவர் விற்பனை செய்ய வைத்திருப்பதாக தாளவாடி வனத்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது.;

Update:2017-07-13 03:00 IST

தாளவாடி,

தாளவாடி அருகே உள்ள திகினாரை பகுதியில் சிறுத்தை தோலை ஒருவர் விற்பனை செய்ய வைத்திருப்பதாக தாளவாடி வனத்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து வனச்சரகர் சிவக்குமார் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஒருவர் சாக்குப்பையுடன் நின்றிருந்தார். அவர் வைத்திருந்த பையை வனத்துறையினர் சோதனை செய்தபோது அதில் சிறுத்தை தோல் வைத்திருந்தது தெரிய வந்தது. பின்னர் வனத்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் தாளவாடி அருகே உள்ள அனந்தபுரம் பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது 25) என்பதும், அவர் தன்னுடைய நண்பரான கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம் இருந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த சிறுத்தை தோலை வாங்கியதும் தெரியவந்தது.

அதை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாக அவர் வனத்துறையினரிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் சசிகுமாரை கைது செய்தனர். இதுதொடர்பாக கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணனை வனத்துறையினர் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்