இஸ்லாமிய மதத்துக்கு எதிராக பேசியதால் இந்து இயக்க பிரமுகர்களை கொலை செய்ய திட்டமிட்டோம்: கைதான இஸ்மாயில் பரபரப்பு வாக்குமூலம்

‘இஸ்லாமிய மதத்துக்கு எதிராக பேசியதால் இந்து இயக்க பிரமுகர்களை கொலை செய்ய திட்டமிட்டோம்’ என்று கைதான இஸ்மாயில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2018-09-04 00:15 GMT

கோவை,

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கடந்த 2016–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22–ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த முபாரக், சதாம் உசேன், சுபேர், அபுதாகீர் ஆகிய 4 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த வழக்கை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை)போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கோவையில் இந்து இயக்க பிரமுகர்களை கொலை செய்யும் சதி திட்டத்துடன் கடந்த 1–ந் தேதி சிலர் சென்னையில் இருந்து கோவைக்கு ரெயிலில் வருவதாக மத்திய புலனாய்வு பிரிவு போலீசார்(ஐ.பி.)கோவை நகர போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் துரிதமாக செயல்பட்டு அந்த ரெயிலில் வந்த சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர் சாதிக் அலி(வயது 29), விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த இஸ்மாயில்(25), பல்லாவரத்தை சேர்ந்த சம்சுதீன்(20), சென்னை ஓட்டேரியை சேர்ந்த சலாவுதீன்(25) ஆகிய 4 பேரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களை அழைத்து செல்வதற்காக வந்த கோவை என்.எச்.ரோட்டை சேர்ந்த ஆசிக்(25) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில், இந்து மக்கள் கட்சி(தமிழகம்) நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத், சக்திசேனா நிறுவனர் அன்புமாரி ஆகியோரை கொலை செய்யும் நோக்கத்துடன் கோவை வந்ததாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து 5 பேர் மீதும் கோவை வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கைதான 5 பேர் மீதும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம்(உபா)உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதானவர்களிடமிருந்து 6 செல்போன்கள், 5 அரிவாள்கள் மற்றும் இரு சக்கர வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட இஸ்மாயில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் ரகசிய உறுப்பினராக உள்ளார். மற்ற 4 பேரும் ஐ.எஸ். அமைப்போடு ஒத்த கருத்து உடையவர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதான இஸ்மாயில் போலீசாரிடம் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–

நான் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வசித்து வருகிறேன். 10–ம் வகுப்பு வரை படித்துள்ளேன். திண்டிவனத்தில் வேஸ்ட் பேப்பர் மார்ட் கடை வைத்து நடத்தி வருகிறேன். நான் இஸ்லாமிய மதத்தில் தீவிர பற்றுடையவன். முகநூலில் நிரந்தர பயணம், பயம் அறியாதவன் என்ற பெயரில் கணக்கு வைத்துள்ளேன். சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். அமைப்பின் மீது மிகுந்த ஈர்ப்பு இருந்ததால் அதில் நான் ரகசிய உறுப்பினராக இருந்து வருகிறேன். அதனால் ஐ.எஸ். பற்றிய தகவல்களை நான் எனது முகநூலில் பதிவு செய்து வந்துள்ளேன்.

எனது இரு சக்கர வாகனத்திலும் காஷ்மீர் மாநிலம் முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டியுள்ளேன். முகநூல் மூலமாக கோவையை சேர்ந்த இஸ்லாமிய மதத்தில் தீவிர பற்றுடைய ஆசிக் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கு பழக்கம் ஆனார். இதே போல சென்னையை சேர்ந்த சம்சுதீனும், வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர் சித்திக் அலி, ஒட்டேரியை சேர்ந்த சலாவுதீன் ஆகியோருடன் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

நாங்கள் ஒருவருக்கொருவர் வாட்ஸ் அப் மற்றும் முகநூல் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்வோம். இதனால் நாங்கள் நண்பர்களானோம். இஸ்லாமிய மதத்துக்கு எதிராக பேசுபவர்களையும், சமூக வலைதளங்களில் பதிவுகள் செய்பவர்களையும் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தோம். அதில் கோவையை சேர்ந்த இந்து மக்கள் கட்சி(தமிழகம்) தலைவர் அர்ஜுன் சம்பத், சக்தி சேனா அமைப்பின் தலைவர் அன்பு மாரி ஆகியோர் இஸ்லாமியருக்கு எதிராக பேசுவது, கருத்துக்கள் பதிவு செய்வது பற்றியும் விவாதித்தோம். இஸ்லாத்தை அவமதிப்பவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் இவர்கள் இருவரையும் கொலை செய்வது என்று முடிவு செய்தோம்.

அர்ஜூன் சம்பத் அடிக்கடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுவதால் அவரை எங்களுக்கு அடையாளம் தெரியும். ஆனால் சக்தி மாரியை தெரியாது என்பதால் ஆசிக் அன்புமாரியின் புகைப்படம் மற்றும் முகவரியை வாட்ஸ் அப் மூலம் எங்களுக்கு அனுப்பியிருந்தார். அவர்கள் 2 பேரையும் கொலை செய்வதற்கான ஏற்பாடுகளை தான் செய்து தருவதாக ஆசிக் கூறினார்.

மேலும் இந்த திட்டத்திற்கு கோவையை சேர்ந்த ஆசிக்கின் நண்பர்கள் ஆட்டோ பைசல் மற்றும் குனியமுத்தூர் அன்வர் ஆகியோர் அனைத்து உதவிகளையும் செய்வார்கள் என்றும் அவர் சொன்னார். அதைத்தொடர்ந்து நாங்கள் 4 பேரும் சென்னையில் இருந்து ஆலப்புழா எக்ஸ்பிரஸ் மூலம் கடந்த 1–ந் தேதி கோவைக்கு வந்தோம். ரெயில் நிலையத்துக்கு வந்து எங்களை அழைத்து செல்வதாக கூறிய ஆசிக் சரியான நேரத்திற்கு வரவில்லை. அவரை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது கொஞ்ச நேரமாகி விட்டது. நீங்கள் 4 பேரும் நேராக வீட்டிற்கு வாருங்கள். நான் உடனே புறப்பட்டு வருகிறேன் என்று சொன்னதை அடுத்த நாங்கள் பேசிக் கொண்டே கோவை ரெயில் நிலைய பின்வாசல் வழியாக வெளியில் வந்து ஆசிக் வீடு நோக்கி நடந்து வந்தோம். அப்போது ஆசிக் இருசக்கர வாகனத்தில் எதிரில் வந்தார். உடனே நாங்கள் அனைவரும் குட்ஷெட் ரோடு–வெறைட்டிஹால் ரோடு சந்திப்பில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். அப்போது எங்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விட்டனர்.

இவ்வாறு இஸ்மாயில் வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசார் கூறினார்கள்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஆட்டோ பைசல், அன்வர் ஆகியோரை பிடிக்க 2 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

கோவையில் கைதான 5 பேரும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளவர்கள் என்பதால் அவர்களை தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கை ஏற்கனவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து இயக்க தலைவர்களை கொலை செய்யும் சதி திட்டத்துடன் கோவை வந்தவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய இளைஞர் அணி தேசிய துணை தலைவர் ஏ.பி.முருகானந்தம், இந்து மக்கள் கட்சி(தமிழகம்) தலைவர் அர்ஜூன்சம்பத், சக்தி சேனா அமைப்பின் தலைவர் அன்பு மாரி மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த மூகாம்பிகை மணி, தசரதன், குணா, சதீஷ், ஜெய்சங்கர், சுரேஷ், குளத்துப்பாளையம் சிவலிங்கம் உள்பட 37 பேருக்கு துப்பாக்கி ஏந்திய கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவர்களில் ஏ.பி.முருகானந்தத்துக்கு வெளிமாநிலங்களில் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களின் வீடுகளுக்கும் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்