மாவட்ட செய்திகள்
கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்லாத தமிழக அரசை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்லாத தமிழக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குத்தாலம்,


கடைமடை வரை காவிரி தண்ணீரை கொண்டு செல்லாத தமிழக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் பா.ம.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் தங்க.அய்யாசாமி, மாநில துணை அமைப்பு செயலாளர் காசி.பாஸ்கரன், மாநில செயற்குழு உறுப்பினர் காமராஜ், நாகை கிழக்கு மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகை மேற்கு மாவட்ட செயலாளர் விமல் வரவேற்றார்.


காவிரி நீரை கடைமடை பகுதிக்கு கொண்டு செல்லாமலும், குளம் மற்றும் நீர்நிலைகளை நிரப்பாமலும் அலட்சியப் போக்கில் தமிழக அரசு செயல்பட்டு வருவதை கண்டித்தும், பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியும், டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்களை தரிசு நிலங்களாக காட்டி, பெட்ரோ கெமிக்கல் மண்டலம், மீத்தேன் எரிவாயு திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற திட்டங்களை கொண்டுவரும் முயற்சிக்கு உதவியாக செயல்படும் தமிழக அரசு அந்த போக்கை கைவிட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாநில வன்னியர் சங்க துணைத்தலைவர் முத்துக்குமார், முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் அய்யப்பன், மாவட்ட நிர்வாகிகள் ஜெயராமன், வைத்தி, கண்ணகி சஞ்சீவிராமன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துக் கொண்டனர். முடிவில் நகர தலைவர் கமல்ராஜா நன்றி கூறினார்.