ஏரியில் மீன்பிடிக்கச்சென்ற பாலிடெக்னிக் மாணவர் பலி

பர்கூர் அருகே ஏரியில் மீன்பிடிக்கச்சென்ற பாலிடெக்னிக் மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். இதுபற்றிய விவரம் வருமாறு-

Update: 2018-09-04 21:45 GMT
பர்கூர், 


கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் பக்கமுள்ள பாலிநாயனப்பள்ளியைச் சேர்ந்தவர் குமார். கூலித்தொழிலாளி. இவருடைய மகன்கள் வல்லரசு (வயது 18), தனுஷ் (12). இதில் வல்லரசு ஊருக்கு அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் படித்து வந்தார். தனுஷ் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான்.

வல்லரசுக்கு நேற்று உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதனால் அவர் கல்லூரிக்கு செல்லவில்லை. இதேபோல் தனுசும் பள்ளிக்கு செல்லவில்லை. வல்லரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார்.

பின்னர் வீடு திரும்பிய வல்லரசு, தனது தம்பி தனுசுடன் ஊருக்கு பக்கத்தில் உள்ள ஏரிக்கு சென்றார். அந்த ஏரியில் சுமார் 20 அடி ஆழம் உள்ள தண்ணீரில் வல்லரசு இறங்கி மீன் பிடித்துக்கொண்டிருந்தார். தனுஷ் ஏரிக்கரையில் அமர்ந்து இருந்தான். மீன் பிடித்துக் கொண்டிருந்த வல்லரசு திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தனுஷ் சத்தம் போட்டான். இதை அறிந்ததும் அந்த பகுதிக்கு வந்தவர்கள் திடுக்கிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பாலேபள்ளி வருவாய் ஆய்வாளர் ராஜாக்கண்ணு கந்திக்குப்பம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பர்கூர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) கண்ணப்பன் மற்றும் நிலைய வீரர்கள் ஏரிக்கு வந்தனர். பின்னர் ஏரியில் இறங்கி தேடினர். அப்போது வல்லரசு இறந்தது தெரியவந்தது. அவரது உடலை மீட்டு வந்தனர். இதை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். வல்லரசு உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்