அரியலூர், ஜெயங்கொண்டத்தில் தேசிய ஊட்டச்சத்து தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்

அரியலூர், ஜெயங்கொண்டத்தில் தேசிய ஊட்டச்சத்து தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2018-09-04 22:45 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், தேசிய ஊட்டச்சத்து தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கலெக்டர் விஜயலட்சுமி ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, கலெக்டர் ஊட்டச்சத்து விழிப்புணர்வு உறுதிமொழியை வாசிக்க, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உறுதிமொழியை ஏற்றனர். ஊர்வலம் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி அரியலூர் பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.

இதைதொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு தொடர்பான உணவு பொருட்கள் கண்காட்சியினை கலெக்டர் விஜயலட்சுமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் ஹேமசந்த்காந்தி, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) லலிதா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பரசி மற்றும் குழந்தை வளர்ச்சி மேற்பார், வையாளர்கள், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மீட்டெடுக்க விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம், மேற்பார்வையாளர் வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்பார்வையாளர் வசந்தா வரவேற்றார். இதையொட்டி அங்கன்வாடி பணியாளர்களின் உணவு பொருட்கள் கண் காட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டிருந்தது. கண்காட்சி மற்றும் ஊர்வலத்தை ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்தூரி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் தலைமையில், ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோரை காப்போம் என அங்கன்வாடி பணியாளர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தில் ஊட்டச்சத்து அங்கன்வாடி பணியாளர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷமிட்டு சென்றனர். ஊர்வலம் அண்ணா சிலை, கடைவீதி வழியாக சென்று மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 155 அங்கன்வாடி மையங்களை சேர்ந்த ஏராளமான பணியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர். முடிவில் வளர்மதி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்