விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆசிரியர் தின விழாவில் பங்கேற்க சென்னை பயணம்

தமிழ் வழியில் பயின்று கல்வி மற்றும் தனித்திறன்களில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு காமராஜர் விருது ஆசிரியர் தினத்தில் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.

Update: 2018-09-04 22:30 GMT
அரியலூர்,

தமிழ் வழியில் பயின்று கல்வி மற்றும் தனித்திறன்களில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு காமராஜர் விருது ஆசிரியர் தினத்தில் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு சென்னையில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் ஆசிரியர் தினவிழாவில் விருது-பாராட்டு சான்றிதழ் மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரமும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து வேனில் சென்னைக்கு 30 மாணவர்கள் நேற்று புறப்பட்டனர். இவர்களுடன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஒட்டக்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை சுசீலா உள்ளிட்ட 11 ஆசிரியர்களும் புறப்பட்டனர். இதையடுத்து முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி அவர்களை வேனில் வழியனுப்பி வைத்தார். இதில் பள்ளி ஆய்வாளர் பழனிசாமி, அலுவலக கண்காணிப்பாளர் சரவணன், ஆசிரியர் குணபாலினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில், 6 தலைமை ஆசிரியர்கள் உள்பட 9 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்க தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. அதன்படி, மாநில அரசு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 9 ஆசிரியர்களுக்கும், சென்னையில் இன்று நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் தமிழக முதல்-அமைச்சர் விருதுகள் வழங்கி கவுரவிக்கிறார். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் கல்வி, கலை, விளையாட்டுத்திறன்களில் தலைசிறந்த மாணவர்கள் 30 பேரும், சிறந்த தேர்ச்சி மற்றும் சிறந்த நிர்வாகத்திறனிற்காக தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி நிர்வாகமும் விருது பெறுகின்றன.

மேலும் செய்திகள்