ஆவூர், அன்னவாசல் பகுதிகளில் மது விற்ற 4 பேர் கைது 157 மதுபாட்டில்கள் பறிமுதல்

ஆவூர், அன்னவாசல் பகுதிகளில் மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 157 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-09-04 23:00 GMT
ஆவூர்,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா பேராம்பூர், ஆவூர் மற்றும் மாத்தூரில் உள்ள சில கடைகளில் மது விற்கப்படுவதாகவும், பேராம்பூர் டாஸ்மாக் கடையில் அனுமதியின்றி பார் நடத்தப் படுதாகவும் மாவட்ட கலால்பிரிவு அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்தது. அதன்பேரில் புதுக்கோட்டை மாவட்ட கலால் உதவி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில், கோட்ட கலால் அலுவலர் மனோகரன், மது விலக்கு பிரிவு உதவி ஆய்வாளர் வீரமணி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று அந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது பேராம்பூரில் சுப்பிரமணியன்(வயது 49), ஆவூரில் அந்தோணிசாமி மகன் தாமஸ்(22), மாத்தூரில் முருகேசன்(41) ஆகியோர் தங்களது வீடு மற்றும் கடைகளில் வைத்து அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து சுப்பிரமணியன், தாமஸ், முருகேசன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 151 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல அன்னவாசல் அருகே உள்ள புல்வயல் பகுதியில் மது விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புல்வயல் பகுதியில் உள்ள உணவு விடுதி அருகே அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த லெட்சுமணன் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 6 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்