மாணவர்கள் படித்து முடித்தவுடன் தங்களது பகுதிகளிலேயே தொழில் தொடங்க வேண்டும் கலெக்டர் பேச்சு

மாணவர்கள் படித்து முடித்தவுடன் தங்களது பகுதிகளிலேயே தொழில் தொடங்க வேண்டும் என புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் நடைபெற்ற மாணவ தொழில் முனைவு விழிப்புணர்வு முகாமில் கலெக்டர் கணேஷ் பேசினார்.

Update: 2018-09-04 22:45 GMT
புதுக்கோட்டை,

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் மாணவ தொழில் முனைவு விழிப்புணர்வு முகாம் புதுக்கோட்டையில் உள்ள மன்னர் கல்லூரியில் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு தொழில்நெறி பயிற்சி கையேட்டினை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது, முதல்-அமைச்சர் தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறார். மாணவர்களிடையே சுய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்து படிப்பு முடித்தவுடன், சுய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதே இந்த முகாமின் முக்கிய நோக்கமாகும்.

மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த பயிற்சிகள், கருத்தரங்குகள், ஆலோசனைகள், நிகழ்வுகள், ஆராய்ச்சி மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் படித்து முடித்தவுடன் வெளி நாடுகளுக்கு வேலைக்கு செல்வதை தவிர்த்து தங்களது பகுதிகளிலேயே தொழில் தொடங்க வேண்டும். இவ்வாறு தொழில் தொடங்கி பலருக்கும் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தர முன்வர வேண்டும். மேலும் சுய தொழில் மட்டுமல்லாமல் தங்களது குடும்பம் சார்ந்த தொழில்களையும் மேற்கொள்ளலாம்.

தமிழக அரசு சுய தொழில் செய்பவர்களுக்கு உதவிடும் வகையில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் பயிற்சியுடன் கூடிய வங்கி கடன் உதவி வழங்கி வருகிறது. இதன் மூலம் பல்வேறு பிரிவினர்களுக்கு மானிய விலையில் கடன் உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இந்த முகாமில் கலந்து கொண்டு உள்ள மாணவ, மாணவிகள் முகாமின் மூலம் சுய தொழில் புரிவதற்கான வாய்ப்புகளை அறிந்து படித்து முடித்தவுடன், புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய தொழில்கள் தொடங்கி பலருக்கும் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் ஓய்வுபெற்ற தமிழக அரசு கூடுதல் செயலாளர் டேனியல் பிரேம்நாத், மன்னர் கல்லூரி முதல்வர் சுகந்தி, தொழில் மைய மாவட்ட மேலாளர் இளங்கோவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜசேகர், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்