சொத்து தகராறில் சித்தியை கொலை செய்த தொழிலாளிக்கு போலீசார் வலைவீச்சு

அரவக்குறிச்சி அருகே சொத்து தகராறில் சித்தியை கொலை செய்த தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-09-04 23:15 GMT
அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவிற்கு உட்பட்ட பெரியமஞ்சுவழி பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருக்கு 2 மனைவி. இதில் முதல் மனைவி பாப்பாத்தி, 2-வது மனைவி லட்சுமி(வயது 68). பாப்பாத்தி மகன் கருப்பசாமி(50) மதுரை வாடிப்பட்டியில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் பெரியமஞ்சுவழி அருகே உள்ள நடுப்பட்டியில் வசித்து வந்த தனது சித்தி லட்சுமி வீட்டிற்கு வந்த கருப்பசாமி சொத்தை பிரித்து தரும்படி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுஉள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி அருகில் கிடந்த மண் வெட்டியை எடுத்து லட்சுமியின் தலையில் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டார்.

இதில் படுகாயம் அடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்த அப்பகுதியினர் இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அரவக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கருப்பசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். வேலுச்சாமியும், பாப்பாத்தியும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்