மாவட்ட செய்திகள்
உடையப்பன் குடியிருப்பு நடுத்தீர்வைப்பதி நாராயணசாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

நாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன்குடியிருப்பு நடுத்தீர்வைப்பதி நாராயணசாமி கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன்குடியிருப்பு நடுத்தீர்வைப்பதி நாராயணசாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த 2-ந்தேதி தொடங்கி 2 நாட்கள் நடந்தது.

விழாவில் முதல் நாள் அதிகாலை 5.30 மணிக்கு பணிவிடை, காலை 8 மணிக்கு கிருஷ்ண பஜனை, பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, மதியம் 2 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு நடுத்தீர்வைப்பதி நாராயணசாமி தலப்புராண மகிமை, இரவு 8 மணிக்கு திரைப்பட மெல்லிசை, 12 மணிக்கு பணிவிடை, கிருஷ்ணன் பிறப்பு, இனிப்பு வழங்குதல் ஆகியவை நடந்தது.

3-ந்தேதி காலை 8 மணிக்கு சுவாமி புதிய சிங்காசன வாகனத்தில் அமர்ந்து வைத்தியநாதபுரம் ஊர் அனந்தகிருஷ்ணன் இல்லத்தில் இருந்து மேளதாளத்துடன் 3 யானைகள் முன் வர ஆலியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், ஆஞ்சநேயர் ஆட்டம், கேரள புகழ் கோலாட்டம், கதகளி, பூ காவடியுடன் ஊர்வலம் நடுத்தீர்வைப்பதி வந்தது.

பகல் 12 மணிக்கு அன்னதானம், பணிவிடை, பிற்பகல் 3 மணிக்கு சங்குத்துறையில் கிருஷ்ணனுக்கு ஆறாட்டு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை முன்னாள் அமைச்சர் பச்சைமால் தொடங்கி வைத்தார். வக்கீல் ஆறுமுகம், மேலக்காட்டுவிளை தொழில் அதிபர் ராஜகோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் பா.ஜ.க. கோட்ட இணை பொறுப்பாளரும், தர்மபுரம் ஊராட்சி முன்னாள் தலைவருமான கணேசன், மாவட்ட செயலாளர் ஜெகநாதன், தெங்கம்புதூர் பா.ஜ.க. தலைவர் முரளி மனோகர்லால், ராமகிருஷ்ணன், முத்துக்குமார், வக்கீல்கள் செல்லம், சிவகுமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 6 மணிக்கு சங்குதுறை வாரி கரையில் கிருஷ்ணனுக்கு ஊஞ்சல் சேவை நடைபெற்றது. ஊர்வலம் திரும்பி வரும் வழியில் மேலகிருஷ்ணன்புதூர் சந்திப்பு, ஆத்திக்காட்டுவிளை சந்திப்பு, தாமரைகுட்டிவிளை சந்திப்பு, பிள்ளையார்புரம் சந்திப்பு, கோவில்விளை சந்திப்பு, பதி ஆகிய இடங்களில் உறியடி நிகழ்ச்சி நடந்தது. அப்போது 3 இடங்களில் அன்னதர்மம் வழங்கப்பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை உடையப்பன்குடியிருப்பு ஊர் தலைவர் ராகவன் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.