தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு மலர் வளையம் வைக்க முயற்சி, போலீசாருடன் தள்ளு முள்ளு

உள்ளாட்சி தேர்தலை நடத்த வலியுறுத்தி தலைமை தேர்தலை ஆணைய அலுவலகத்திற்கு மலர் வளையம் வைக்க முயற்சி செய்த 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-04 22:45 GMT

மூலக்குளம்,

புதுவை மாநிலத்தில் கடந்த 7 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்தக்கோரி பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் உள்ளாட்சி தேர்தலை நடத்த எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்தும், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் உள்ளாட்சி கூட்டமைப்பினர் நேற்று காலை கம்பன் நகர் பஸ்நிலையம் அருகே ஒன்று கூடினர்.

அவர்கள் அங்கிருந்து மாநில தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு மலர் வளையம் வைக்கும் நோக்கில் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். ஊர்வலத்திற்கு கூட்டமைப்பு தலைவர் ஜெகன்நாதன் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலத்தில் மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாறன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படையின் தலைவர் பாவாடைராயன், தமிழர் களத்தலைவர் அழகர், தமிழர் தேசிய முன்னணி இயக்க தலைவர் தமிழ்மணி மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் விழுப்புரம் சாலை வழியாக சென்றது. அப்போது அவர்கள் மலர் வளையத்தை கையில் கொண்டு சென்றனர்.

இதுபற்றிய தகவல் அறிந்தவுடன் ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் போலீசாரின் தடுப்பை மீறி செல்ல முயற்சி செய்தனர். அப்போது போலீசார் போராட்ட காரர்கள் வைத்திருந்த மலர்வளையத்தை பறிக்க முயற்சி செய்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு–முள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்