மாவட்ட செய்திகள்
ஓய்வுபெற்ற தாசில்தார் மனைவியிடம் 19 பவுன் நகை அபேஸ்

திண்டிவனத்தில் ஓய்வுபெற்ற தாசில்தார் மனைவியிடம் 19 பவுன் நகைகளை நூதனமுறையில் அபேஸ் செய்த 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டிவனம், 


திண்டிவனம் ராஜகோபால் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். ஓய்வுபெற்ற தாசில்தார். இவருடைய மனைவி சுந்தரி(வயது 68). இவர் தனது 9 பவுன் நகையை புதுச்சேரியில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்திருந்தார். அதனை திருப்புவதற்காக சுந்தரியும், அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வரும் கஸ்தூரி என்பவரும் நேற்று மதியம் புதுச்சேரிக்கு சென்றனர். அங்கு நகையை திருப்பிவிட்டு மாலை 4.30 மணிக்கு பஸ்சில் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வந்து இறங்கினர். பின்னர் 2 பேரும் நாகலாபுரம் குளத்தெரு வழியாக நடந்து சென்றனர். அப்போது 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் பின்தொடர்ந்து வந்து சுந்தரியிடம், அந்த பகுதியில் கொலை நடந்துள்ளதாகவும், போலீசார் விசாரணை நடத்திக்கொண்டிருப்பதாகவும் கூறினர். மேலும் தாங்கள் அணிந்துள்ள நகைகளை கழற்றி பையில் வைத்துக்கொள்ளுமாறும் கூறினர். உடனே சுந்தரி, தான் அணிந்திருந்த 10 பவுன் நகைகளை கழற்றி, ஏற்கனவே ஒரு சிறிய பையில் இருந்த 9 பவுன் நகையுடன் சேர்த்து வைத்தார்.

அப்போது அந்த வாலிபர்கள் உதவி செய்வதுபோல் நடித்து நகைகள் இருந்த சிறிய பையை வாங்கி, பெரிய பையில் போடுவதுபோல் பாவனை செய்தனர். இதையடுத்து சுந்தரி தனது வீட்டிற்கு சென்று பையை பார்த்தபோது, அதில் நகைகள் இருந்த சிறிய பையை காணவில்லை. அப்போதுதான், 2 வாலிபர்களும் நூதனமுறையில் தன்னிடம் இருந்த 19 பவுன் நகைகளை அபேஸ் செய்திருப்பது சுந்தரிக்கு தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இந்த சம்பவம் குறித்து திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர்களை தேடி வருகின்றனர். மேலும் நகைகள் அபேஸ் செய்யப்பட்ட இடத்தின் அருகில் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் வாலிபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் அந்த காட்சியை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் திண்டிவனத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.