மாவட்ட செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது மாநகர பஸ் மோதி 2 பேர் பரிதாப சாவு

வில்லிவாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மாநகர பஸ் மோதிய விபத்தில் தனியார் வங்கி ஊழியர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
செங்குன்றம்,

சென்னை கொளத்தூர் சிட்கோநகர் 55-வது தெருவைச் சேர்ந்தவர் லோகேஷ் (வயது 23). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து வந்தார். கொளத்தூர் மக்காராம் தோட்டம் செங்குன்றம் சாலையை சேர்ந்தவர் கோகுல்ராஜ் (30). இவர் அம்பத்தூரில் தனியார் வங்கியில் வேலை செய்து வந்தார்.

இவர்கள் 2 பேரும் நேற்று பகல் மோட்டார் சைக்கிளில் சென்னை கொளத்தூரில் இருந்து பாடியை நோக்கி வந்தனர். பாடி அம்பேத்கர் நகர் அருகே வந்தபோது மாநகர பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த லோகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயமடைந்த கோகுல்ராஜை அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் கோகுல்ராஜ் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.