நடு வழியில் சங்கிலியை பிடித்து இழுத்து ஓடும் ரெயிலை நிறுத்திய எலக்ட்ரீசியன் - பயணிகள் அவதி

ஜோலார்பேட்டை அருகே நடுவழியில் சங்கிலியை பிடித்து இழுத்து ஓடும் ரெயிலை நிறுத்திய எலக்ட்ரீசியனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

Update: 2018-09-04 22:15 GMT
ஜோலார்பேட்டை,

சென்னையில் இருந்து புறப்பட்டு காட்பாடி வழியாக மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. இரவு 7.30 மணியளவில் ஜோலார்பேட்டையை அடுத்த பாசன்பேட்டை ரெயில்வேகேட் அருகே வந்தபோது, ரெயில் திடீரென நடுவழியில் நின்றது. முன்பதிவு பெட்டி ஒன்றில் பயணம் செய்த பயணி ஒருவர் சங்கிலியை பிடித்து இழுத்து ஓடும் ரெயிலை நிறுத்தியது தெரிய வந்தது.

அந்தப் பெட்டியில் பயணம் செய்த டிக்கெட் பரிசோதகர் சென்னையைச் சேர்ந்த கிஷோர், விரைந்துச் சென்று பயணிகளிடம் விசாரித்தார். சங்கிலியை பிடித்து இழுத்து ஓடும் ரெயிலை நிறுத்தியவர், சென்னை புறநகர் பகுதியான பூந்தமல்லியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வரும் திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த மாதவன் (வயது 33) எனத் தெரிய வந்தது.

பொதுப்பெட்டியில் பயணம் செய்ய டிக்கெட் பெற்ற அவர், முன்பதிவு பெட்டியின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்ததும், பொதுப்பெட்டியில் அமர இடம் கிடைக்காததால், முன்பதிவு பெட்டிக்கு வந்து, ஏற்கனவே ஒரு பயணி முன்பதிவு செய்திருந்த இடத்தில் படுத்துத்தூங்கியதும், அந்த இருக்கைக்கு உரியவர் வந்து, மாதவனை தட்டி எழுப்பியபோது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறால் சங்கிலியை பிடித்து இழுத்து ஓடும் ரெயிலை நிறுத்தியதும் தெரிய வந்தது.

ஜோலார்பேட்டை ரெயில்வே பாதுகாப்புப்படையினரும், ரெயில்வே போலீசாரும் சம்பந்தப்பட்ட பெட்டிக்கு வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து டிரைவர் ராஜசேகர் ரெயிலை இயக்க முயன்றபோது, மின்சார என்ஜினில் பழுது ஏற்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

ஜோலார்பேட்டை ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து, மின்சார என்ஜினில் ஏற்பட்டு இருந்த பழுதை நீக்கி சரி செய்தனர். அதன் பிறகே அங்கிருந்து ரெயில் புறப்பட்டுச் சென்றது. நடு வழியில் திடீரெனச் சங்கிலியை பிடித்து இழுத்து ஓடும் ரெயிலை நிறுத்தியதாலும், இதனால் என்ஜினில் பழுது ஏற்பட்டு ரெயிலை இயக்க முடியாததாலும் இரவு 7.30 மணியில் இருந்து 8.30 மணிவரை காலதாமதம் ஏற்பட்டது. பயணிகள் அவதிப்பட்டனர்.

மேலும் செய்திகள்