குடிபோதையில் மனைவியை தாக்கிய காவலாளி, போலீசுக்கு பயந்து தற்கொலை

குடிபோதையில் மனைவியை தாக்கிய காவலாளி, போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார். மயிலம் அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2018-09-04 22:15 GMT
மயிலம், 


விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள பொம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சாரங்கபாணி(வயது 52). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக இருந்தார். இவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து, தனது மனைவி சுந்தரியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இருப்பினும் சகித்துக்கொண்டு சுந்தரி, அவருடன் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவும் சாரங்கபாணி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதை சுந்தரி கண்டித்தார். இதனால் சாரங்க பாணிக்கும், சுந்தரிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சாரங்கபாணி, அருகில் கிடந்த கல்லை எடுத்து சுந்தரியை தாக்கினார். இதனால் அவரது தலையில் இருந்து ரத்தம் வழிந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டனர்.

இதனிடையே மனைவியின் தலையில் ரத்தம் வழிந்ததை கண்ட சாரங்கபாணி அதிர்ச்சி அடைந்தார். சுந்தரி இறந்து விடுவாளோ, தன்னை போலீசார் கைது செய்து விடுவார்களோ என்று பயந்த சாரங்கபாணி, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தார். பின்னர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரது வாயில் இருந்து நுரை வெளியேறியது.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சாரங்கபாணி நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து சுந்தரி கொடுத்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்