மாவட்ட செய்திகள்
பெருங்களத்தூரில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்றவர் கைது

பெருங்களத்தூரில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்றவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஸ்கேன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
தாம்பரம்,

கோவை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 28). தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் வரதராஜபுரம் பகுதியில் 3 மாதங்களாக தங்கி பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பழைய பெருங்களத்தூர் பகுதியில் உள்ள ஒரு கடையில் பொருட்களை வாங்கினார். பின்னர் ரூ.5 ஆயிரத்துக்கு 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்.

அப்போது அதில் சில நோட்டுகள் வித்தியாசமாக இருந்ததால் சந்தேகமடைந்த கடை ஊழியர்கள் இதுகுறித்து பீர்க்கன்காரணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று பிரகாஷை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் பிரகாஷ் வீட்டில், 500 ரூபாய் நோட்டை ஸ்கேன் செய்து கலர் ஜெராக்ஸ் எடுத்து கடைகளில் மாற்றியும், பைனான்சுக்கு பணம் கேட்பவர்களுக்கு அந்த கள்ள நோட்டுகளை கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் தங்கியிருந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

அங்கு கள்ள நோட்டுகளை தயாரிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர், ஸ்கேன் எந்திரம், பிரிண்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பிரகாசை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 16-ஐ பறிமுதல் செய்தனர்.