பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அரசியல் கட்சியினரை ஒருங்கிணைத்து விரைவில் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அனைத்து அரசியல் கட்சியினரை ஒருங்கிணைத்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று விக்கிரமராஜா கூறினார்.

Update: 2018-09-04 22:45 GMT

திருச்சி,

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய, மாநில அரசுகள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அறிவித்திருந்தனர். ஆனால் வால்மார்ட் நிறுவனம் தற்போது நாடு முழுவதும் தொடங்க உள்ளது. சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை கண்டித்து நாடு முழுவதும் வருகிற 28–ந்தேதி கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டம் தொடர்பாக வருகிற 9–ந்தேதி டெல்லியில் அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 21 லட்சம் கடைகள் அடைக்கப்படும். மேலும் மற்ற சங்கங்களும் ஆதரவு தெரிவித்து பங்கேற்க உள்ளனர்.

சுங்க கட்டணம் உயர்ந்தாலும் சாலையில் போதுமான அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை. 2019–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு உணவு பாதுகாப்பு சட்டம், வணிக வரி திருத்த சட்டம் உள்ளிட்டவற்றை முழுமையாக அகற்ற வேண்டும் என்பது உள்பட வணிகர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற டிசம்பர் மாதம் 16–ந்தேதி டெல்லியில் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பங்கேற்கும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், விலையை குறைக்க கோரியும் மாநில அளவில் விரைவில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள், பொதுமக்களை ஒருங்கிணைத்து இந்த போராட்டம் நடத்தப்படும். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

பிளாஸ்டிக்கிற்கு பதில் மாற்றுப்பொருளை அமல்படுத்த வேண்டும். மேலும் பொதுமக்களிடம் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில பொது செயலாளர் கோவிந்தராஜூலு, துணை தலைவர் சுப்ரமணியன், மண்டல தலைவர் தமிழ்செல்வம், திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் எம்.எஸ்.மைதீன் உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். முன்னதாக பேரமைப்பின் மாநில, மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அலுவலகத்தில் நடந்தது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்