மாவட்ட செய்திகள்
சேலத்தில் பரபரப்பு: போலி உதவி கலெக்டர் சிக்கினார் - போலீசார் விசாரணை

சேலத்தில் போலி உதவி கலெக்டர் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்,

சேலம் மாநகரின் மைய பகுதியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு 40-க்கும் மேற்பட்ட துறை அலுவலகங்கள் செயல்படுகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தினமும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து தங்களுடைய கோரிக்கை மனுவை கொடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று பிற்பகல் கலெக்டர் அலுவலகத்துக்குள் ஒருவர் அங்கும், இங்குமாக சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். இதை பார்த்த கலெக்டர் அலுவலக அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் சென்று விசாரித்தனர். அப்போது அவர்களிடம், தான் விழுப்புரம் மாவட்டத்தில் உதவி கலெக்டராக பணியாற்றுவதாக அவர் தெரிவித்தார். இதற்கான அடையாள அட்டை ஏதும் உள்ளதா? என்று அதிகாரிகள் கேட்டதற்கு அவர் மழுப்பலான பதில் கூறினார்.

இதையடுத்து சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரை பிடித்து சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் தலைவாசல் அருகே உள்ள பட்டுதுறை பகுதியை சேர்ந்த ஜெயராஜ்(வயது 51) என்பதும், எம்.ஏ. பட்டதாரி என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் போலி உதவி கலெக்டர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.