கொள்ளிடம் அணைக்கு நீர்வரத்து குறைந்தது: மதகுகள் உடைந்த பகுதியில் தடுப்பு ஏற்படுத்தும் பணி இறுதிகட்டத்தை எட்டியது

கொள்ளிடம் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. மதகுகள் உடைந்த பகுதியில் தடுப்பு ஏற்படுத்தும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

Update: 2018-09-04 22:45 GMT

ஜீயபுரம்,

திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் அணையில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 22–ந்தேதி இரவு 9 மதகுகள் உடைந்தன. இதனை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மதகுகள் உடைந்த பகுதியில் ‘யு‘ வடிவில் 108 மீட்டருக்கும், அதன் அருகேயும் சேர்த்து மொத்தம் 220 மீட்டருக்கு தடுப்புகள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதில் மதகுகள் உடைந்த பகுதி வழியாக ஆற்றில் தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுக்க மணல் மூட்டைகள், பாறாங்கற்களை கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் நேற்று முன்தினத்தை விட, நேற்று கூடுதலாக பாறாங்கற்கள் கொட்டப்பட்டன. இதனால் ஆற்றில் தண்ணீர் வீணாக செல்வது பெருமளவு குறைக்கப்பட்டது.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரில் மாயனூர் கதவணை வழியாக முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து நேற்று குறைந்திருந்தது. நேற்று மாலை கொள்ளிடம் அணை வழியாக வினாடிக்கு 5,300 கன அடி நீர் வெளியேறியது.

காவிரி ஆற்றில் வினாடிக்கு 4,500 கன அடி நீர் வெளியேறியது. தண்ணீர் வரத்து நேற்று குறைந்திருந்ததால் சீரமைப்பு பணியில் சிரமம் குறைந்தது. இரும்பு குழாய்களை பொருத்தி தடுப்புகள் ஏற்படுத்தி, அதனருகே மணல் மூட்டைகளை அடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தென்கரை, வடகரை பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி பாதிக்கு மேல் முடிவடைந்து விட்டது.

தற்போதைக்கு கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்க முனைப்போடு பணிகள் நடந்து வருகிறது. இதில் பெருமளவு முடிவடைந்து இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பாறாங்கற்களை தண்ணீரில் போட்டு நிரப்பி, அதன் மேல்பகுதியில் மணற்பரப்பு அமைக்கப்படுகிறது. நேற்று இரவிலும் மின் விளக்குகள் வெளிச்சத்தில் வழக்கத்தை விட கூடுதலாக பணிநடந்தது. மதகுகள் உடைந்த பகுதியில் தண்ணீர் வீணாக ஆற்றில் செல்வதை தடுக்கும் பணி இன்று (புதன்கிழமை) இரவுக்குள் முழுமையாக முடிந்து விடும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்