கடலூர் குப்பன்குளம் பகுதியில் கலெக்டர் அன்புசெல்வன் திடீர் ஆய்வு

சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து கடலூர் குப்பன்குளம் பகுதியில் கலெக்டர் அன்புசெல்வன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குழாயில் கலங்கலாக வந்த தண்ணீரை கைகளில் பிடித்து குடித்து பார்த்தார்.

Update: 2018-09-04 22:21 GMT
கடலூர், 


கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பன்குளம் பாரதிதாசன் நகர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் குப்பன்குளம் பகுதி கிளை செயலாளர் பழனி தலைமையில் அந்த பகுதி மக்கள் கழிவுநீர் கலந்து வந்த குடிநீரை பாத்திரங்கள் மற்றும் பாட்டில்களில் பிடித்து வைத்து நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேற்று குப்பன்குளம் பாரதிதாசன்நகருக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பகுதி மக்கள் பாத்திரங்களில் பிடித்து வைத்திருந்த கழிவுநீர் கலந்த குடிநீரை கலெக்டரிடம் காண்பித்தனர்.

பின்னர் அருகில் கழிவுநீர் கால்வாய் செல்லும் பாதையில் இருந்த குழாயில் இருந்து கலங்கலாக வந்த குடிநீரை கைகளில் பிடித்து குடித்து பார்த்து அதன் தரத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். இதையடுத்து குடிநீர் குழாய் அமைக்கப்பட்டிருந்த பகுதியை பார்வையிட்ட கலெக்டர் அங்கே திரண்டு நின்ற பொதுமக்களிடம் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பு இருப்பதை பார்த்த கலெக்டர், கால்வாயை அடைத்து இருந்த பிளாஸ்டிக் பையை எடுத்து பொதுமக்களிடம் காண்பித்து குப்பைகளை கழிவுநீர் கால்வாய்களில் கொட்டுவதால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே குப்பைகளை உரிய இடத்தில் கொட்ட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

இதைக் கேட்ட பொதுமக்கள் எங்கள்பகுதியில் கடந்த ஒரு மாதமாக கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இது குறித்து நாங்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, இதனால் தனியாரிடம் காசு கொடுத்துதான் குடிநீரை வாங்கி பயன்படுத்தி வருகிறோம் என கூறினர். உடனே அங்கிருந்த அதிகாரிகளிடம் பொதுமக்களின் குறைகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுங்கள் என்று கலெக்டர் கூறினார். 

மேலும் செய்திகள்