வாழப்பாடி: அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

வாழப்பாடி அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு நடத்தினார்.

Update: 2018-09-04 23:15 GMT
வாழப்பாடி,

வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேற்று காலை வந்த மாவட்ட கலெக்டர் ரோகிணி, ஊரக வளர்ச்சித்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, பொது சுகாதாரத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் அரசு திட்டங்கள் குறித்து கலந்தாய்வு நடத்தினார். பின்னர் வாழப்பாடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்று பொது வினியோக கடையை ஆய்வு செய்தார்.

இதையடுத்து வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர், வெளி நோயாளிகள், உள்நோயாளிகள் மற்றும் பிரசவ வார்டு பகுதிகளை ஆய்வு செய்தார். வெளிநோயாளிகள் பதிவேடுகளை பெயர், முகவரியுடன் பராமரிக்க அறிவுறுத்தினார். ஆய்வின்போது வாழப்பாடி தாசில்தார் பொன்னுசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாலினி, செந்தில்குமார், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ராதிகா மற்றும் துறை அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.

இதற்கிடையில் கலெக்டர் ஆய்வுக்கு வந்துள்ளதை அறிந்த வாழப்பாடி பேரூராட்சி அக்ரஹாரம் பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து, அவரிடம் வாரத்திற்கு இருமுறை மேட்டூர் காவிரி நதிநீர் தட்டுப்பாடின்றி வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டதும் குடிநீர் வினியோகிக்கவும், அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்ததால் பொதுமக்கள் அங்கிருந்து சென்றனர்.

மேலும் செய்திகள்