சம்பா பருவத்துக்கு தேவையான 180 டன் விதைநெல் இருப்பு

சம்பா பருவத்துக்கு தேவையான 180 டன் விதைநெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

Update: 2018-09-04 21:45 GMT
தேனி, 

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 11 ஆயிரத்து 789 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதில், 8 ஆயிரத்து 235 ஏக்கர் திருந்திய நெல் சாகுபடியில் நடவு செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல் சம்பா பருவத்தில் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், போடி, தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி ஆகிய வட்டார பகுதிகளில் 19 ஆயிரத்து 760 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக திருந்திய நெல் சாகுபடி முறையை கையாளுவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

சம்பா பருவத்துக்கு தேவையான விதைநெல் ரகமான என்.எல்.ஆர்.-34449, டி.கே.எம்.-13 ஆகியவை சுமார் 180 டன் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. திருந்திய நெல் சாகுபடி முறைக்கு சில வழிமுறைகளை விவசாயிகள் கையாள வேண்டும். இந்த முறையிலான சாகுபடிக்கு ஒரு ஏக்கர் நடவுசெய்வதற்கு 2 முதல் 3 கிலோ விதை போதுமானது. ஒரு ஏக்கருக்கு 40 சதுர மீட்டர் பரப்பளவில் நாற்றாங்கால் தேவை. நிலத்தில் பாலித்தீன் விரிப்புகளை பயன்படுத்தி மேட்டுப்பாத்தி அமைத்து, மரச்சட்டங்களை வைத்து மண் மற்றும் தொழுவுரங்களை நிரப்பி விதைக்கலாம்.
நடவு செய்ய 14 நாட்கள் வயதான நாற்றுகள் போதுமானது. நடவு செய்யும் போது ஒரு குத்துக்கு ஒரு நாற்று வைத்து நடவு செய்ய வேண்டும். இளம் வயது நாற்றுகளை நடவு செய்வதால் தூர் அதிகமாக வெடித்து மகசூல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. நாற்றுகளை 22.5 சென்டி மீட்டருக்கு, அதே அளவு இடைவெளியில் நடவு செய்வதால் வேர் வளர்ச்சி, தூர் எண்ணிக்கை அதிகரித்து அதிக நெல் மணிகள் கிடைக்கும்.

இந்த முறையில் நடவு செய்வதால் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைய வாய்ப்புள்ளது. எனவே, திருந்திய நெல் சாகுபடி முறையை கடைபிடித்து விவசாயிகள் அதிக மகசூல் பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்