மாவட்ட செய்திகள்
இந்திய சந்தையில் தடம் பதிக்கும் சீனாவின் ‘ஹோம்டோம்’

இந்திய சந்தையில் மற்றுமொரு சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஹோம்டோம் தனது தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது.
ஒரே சமயத்தில் 3 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இந்திய சந்தையில் ஹோம்டோம் தடம் பதித்துள்ளது. இந்த மூன்று ஸ்மார்ட்போன்களுமே ரூ.11 ஆயிரத்திற்கும் குறைவானவை. இவை ‘ஹெச் 1’, ‘ஹெச் 3’ மற்றும் ‘ஹெச் 5’ என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளன. இவற்றின் விலை முறையே ரூ.7,499, ரூ.9,990 மற்றும் ரூ.10,990 ஆகும்.

இந்த மாடல்களின் மூலம் அடுத்த 6 மாதத்திற்குள் இந்தியாவில் 5 சதவீத சந்தையை பிடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஹோம்டோம் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு இயக்குநர் நிகில் பூடானி தெரிவித்துள்ளார்.

அனைத்து மாடல்களும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்கு தளத்தை கொண்டவை. முக அடையாளம் மூலம் செயல்படுவது மற்றும் பின் பகுதியில் விரல் ரேகை பதிவு மூலம் செயல்படுவது போன்ற வசதிகளை கொண்டவை.

இந்த போன்கள் அனைத்திற்கும் 3 ஆண்டு வாரண்டி மற்றும் 2 முறை தொடு திரை மாற்றி கொடுக்கும் சலுகையை இந்நிறுவனம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இவை அனைத்தும் 4-ஜி தொழில் நுட்பத்தில் செயல்படுபவை. இந்நிறுவனம் 100-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு காப்புரிமை (பேடன்ட்) பெற்றுள்ளதாகவும், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு கூடுதலாக செலவிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைமையகம் சீனாவின் ஷென்சென் நகரில் உள்ளது.

‘ஹெச் 1’ மாடல் ஸ்மார்ட்போன் 5.5 அங்குல தொடு திரை, 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. நினைவகத்துடனும் 3,000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடனும் வந்துள்ளது.

‘ஹெச் 3’ மாடல் 5.5 அங்குல தொடு திரை, 1.3 கிகா ஹெர்ட்ஸ் மற்றும் 64 பிட் பிராசஸர் மற்றும் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. ஸ்டோரேஜ் வசதி கொண்டது. இதில் 3,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இரண்டு மாடலிலும் பின்புறம் இரண்டு கேமராக்கள் உள்ளன. 13 எம்.பி. மற்றும் 2 எம்.பி. பின்புற கேமராவும் முன்புறத்தில் 8 எம்.பி. கேமராவும் உள்ளது.

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் உற்பத்தி மையத்தை அமைக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டெல்லியை அடுத்த நொய்டாவில் ரூ.300 கோடி முதலீட்டில் ஆலை அமைக்க தீர்மானித்துள்ளது.

‘ஹெச் 5’ மாடலில் 5.7 அங்குல தொடுதிரை, 16 எம்.பி. மற்றும் 8 எம்.பி. கேமரா மற்றும் முன் பகுதியில் 8 எம்.பி. கேமராவும் உள்ளது. இதில் 3,300 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது.

‘பாஸ்ட் சார்ஜிங்’ தொழில்நுட்பம் பின்பற்றப்பட்டுள்ளது. 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. ஸ்டோரேஜ் வசதி கொண்டது. அனைத்து ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்ட் 8.1 இயங்குதளத்தைக் கொண்டவை.