தூத்துக்குடி கடற்கரையில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி மேலும் வேம்பார், படுக்கப்பத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

தூத்துக்குடி கடற்கரையில் மீனவ கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேற்று சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது.

Update: 2018-09-05 21:30 GMT

தூத்துக்குடி, 

தூத்துக்குடி கடற்கரையில் மீனவ கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேற்று சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது. மேலும் வேம்பார், படுக்கப்பத்து கடற்கரைகளிலும் மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சுனாமி

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு மையத்துடன் இணைந்து கடலோர மாவட்டங்களில் சில கிராமங்களை தேர்ந்தெடுத்து மாதிரி சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி நடத்த முடிவு செய்தது. அதன்படி இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பின் மூலமாக சுனாமி எச்சரிக்கை பெறப்படும் போது அந்த தகவல் பரிமாற்றமானது அரசுத்துறைகள் மூலம், பாதிக்கப்படும் மக்களுக்கு எவ்வாறு சென்றடைகிறது என்று சோதிக்கப்பட்டது.

ஒத்திகை நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் இனிகோநகர், படுக்கப்பத்து, வேம்பார் ஆகிய 3 இடங்களில் உள்ள மீனவ மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தூத்துக்குடி இனிகோநகர் கடற்கரை பகுதியில் நேற்று காலையில் ஒத்திகை தொடங்கியது. அப்போது சுனாமி எச்சரிக்கை பெறப்பட்டவுடன் அதிகாரிகள் மீனவ கிராமங்களுக்கு வந்தனர். அவர்கள் கடற்கரையில் நின்றபடி கடலுக்குள் உள்ள மீனவர்களை கரைக்கு வரவழைக்கும் வகையில் கண்ணாடி மூலம் ஒளியை பிரதிபலித்து சிக்னல் செய்தனர். தொடர்ந்து போலீசார் ஒலிபெருக்கி மூலம் தகவலை தெரிவித்தனர். அதன்பேரில் வீடுகளில் இருந்த மக்கள் வேமாக வெளியில் வந்தனர். அவர்களை வாகனங்கள் மூலம் முகாம்களுக்கு அதிகாரிகள் அழைத்து சென்றனர். அங்கு மருத்துவ உதவிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதே போன்று கடலில் தத்தளிப்பவர்களை தீயணைப்பு படையினர் எவ்வாறு விரைந்து மீட்பது என்பது குறித்தும் விளக்கினர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், வருவாய்த்துறை, மீன்வளத்துறை, சுகாதாரத்துறை, கடலோர பாதுகாப்பு படையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் பங்கேற்பு

இந்த ஒத்திகை நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பார்வையிட்டார். உதவி கலெக்டர் பிரசாந்த் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி ஆணையர் பிரின்ஸ், தாசில்தார் சிவகாமசுந்தரி, தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று வேம்பார், படுக்கபத்திலும் கடற்கரை ஓரத்தில் உள்ள மீனவ கிராம மக்களிடம் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

மேலும் செய்திகள்