மாவட்ட செய்திகள்
கூடலூர் அருகே கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானைகள்

கூடலூர் அருகே கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானைகளை வனத்துறையினர் விடிய, விடிய போராடி விரட்டியடித்தனர்.
கூடலூர்,கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட 4–ம் நெம்பர், லாரஸ்டன், சூண்டி, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக 11 காட்டுயானைகள் 3 கூட்டங்களாக முகாமிட்டுள்ளன. அதில் குட்டி யானைகளும் அடங்கும். இரவு நேரத்தில் வீடுகள் மற்றும் கடைகளின் கதவுகளை உடைத்து அரிசி, பருப்பு, காய்கறி போன்ற உணவு பொருட்களை குட்டி யானைகள் தின்று வருகின்றன. உணவு பொருட்களை தின்று பழகிவிட்டதால் விரட்டினாலும் மீண்டும் குட்டியானைகள் வீடுகளை உடைத்து உள்ளே புகுந்து விடுகின்றன. இவ்வாறு பல வீடுகளை காட்டுயானைகள் சேதப்படுத்தி உள்ளன. எனவே காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து ஓவேலி வனத்துறையினர் இரவு, பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க முடியவில்லை.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காந்திநகர், சூண்டி, சின்னசூண்டி ஆகிய கிராமங்களில் காட்டுயானைகள் குடியிருப்புகளை முகாமிட்டன. இதை அறிந்த கிராம மக்கள் பீதி அடைந்தனர். காந்திநகர் பகுதியில் மூர்த்தி என்பவரது வீட்டில் மாட்டு கொட்டகையை காட்டுயானைகள் சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. இதுகுறித்து தகவல் அறிந்த ஓவேலி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் மற்றொரு காட்டுயானை கூட்டம் சூண்டி முருகன் கோவில் அருகே உள்ள முருகையா என்பவரது வீட்டை முற்றுகையிட்டது. மேலும் சின்னசூண்டி மாரியம்மன் கோவில் அருகே உள்ள மகேந்திரன் என்பவரது வீட்டையும் காட்டுயானைகள் முற்றுகையிட்டன.ஒரே நேரத்தில் 3 இடங்களில் காட்டுயானைகள் வீடுகளை முற்றுகையிட்டதால் எங்கு செல்வது என்ற குழப்பத்தில் வனத்துறையினர் திணறினர். இருப்பினும் 3 குழுக்களாக பிரிந்து சென்று விடிய, விடிய போராடி காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் நேற்று அதிகாலையில் அனைத்து காட்டுயானைகளும் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டன. இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்தால் வனத்துறையினர் வந்து விரட்டுவதும், பின்னர் மீண்டும் அவை வருவதும் வாடிக்கையாகிவிட்டது. இரவு நேரம் என்றாலே குட்டியானைகள் கதவை உடைத்து வீட்டிற்குள் வந்து விடுமோ? என்ற அச்சம் தொற்றி கொள்கிறது. எனவே காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:–கூடலூர் வனக்கோட்டத்தில் கூடலூர், ஓவேலி, தேவாலா, நாடுகாணி தாவரவியல் மையம், பிதிர்காடு, சேரம்பாடி என 6 வனச்சரகங்கள் உள்ளன. அனைத்து வனச்சரக பகுதிகளிலும் காட்டுயானைகள் அட்டகாசம் இரவு, பகலாக இருக்கிறது. அவற்றை விரட்டும் பணியில் வனத்துறையினர் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் முழுமையாக ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் மக்கள் கொடுக்கும் தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்ல வசதியாக வாகனங்களும் தரப்பட்டுள்ளன.ஆனால் அடிக்கடி பல இடங்களுக்கு செல்ல வேண்டி இருப்பதால், அரசு நிர்ணயம் செய்துள்ளதை விட டீசல் செலவு அதிகமாக இருக்கிறது. மேலும் காட்டுயானைகளை விரட்ட பட்டாசுகளும் போதியளவு இல்லை. இதனால் விரட்டும் பணியின்போது காட்டுயானைகள் வனத்துறையினரை திரும்பி தாக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்புடன் காட்டுயானைகளை விரட்ட கூடுதலாக பட்டாசு மற்றும் டீசல் வாங்க நிதி ஒதுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.