விவாகரத்து செய்த பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

விவாகரத்து செய்த பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோபி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2018-09-05 23:30 GMT

கடத்தூர்,

விவாகரத்து செய்த பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோபி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

கோபி அருகே உள்ள உக்கரம் மில்மேடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 30). இவருடைய மனைவி நந்தினி (28). இவரும் கூலித்தொழிலாளிகள். இவர்களுக்கு தரனீஷ் என்ற மகன் உள்ளான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதருக்கும், நந்தினிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் அவர்கள் 2 பேரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் தனித்தனியாக அதேப்பகுதியில் வசித்து வந்தனர். இதில் தரனீஷ் தாய் நந்தினியுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2–4–2017 அன்று நந்தினி கோபி அருகே உள்ள ராமசாமி என்பவருடைய தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு சென்ற ஸ்ரீதர், நந்தினியை தகாத வார்த்தையில் பேசினார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்ரீதர், நந்தினியை சரமாரியாக குத்தினார். இதில் நிலைகுழைந்து போன நந்தினி ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நந்தினை குத்திக்கொலை செய்த ஸ்ரீதரை கைது செய்தனர். மேலும் போலீசார் கோபி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி மணி முன்பு நேற்றுக்காலை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பெண்ணை கத்தியால் குத்திக்கொலை செய்த குற்றத்திற்காக ஸ்ரீதருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

இதைத்தொடர்ந்து ஸ்ரீதர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்