மாவட்ட செய்திகள்
வால்பாறை அருகே ரே‌ஷன், மளிகை கடைகள்– கிறிஸ்தவ ஆலயத்தில் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்

கேரளாவில் இருந்து வால்பாறைக்கு கூட்டம், கூட்டமாக காட்டுயானைகள் வருகின்றன. இதில் சில காட்டுயானைகள், ரே‌ஷன்கடை, மளிகை கடைகள் மற்றும் கிறிஸ்தவ ஆலையத்தில் புகுந்து அட்டகாசம் செய்தனர்.
வால்பாறை,கேரள வனப்பகுதிகளிலிருந்து காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாக வால்பாறைக்கு வரத்தொடங்கி உள்ளன. இந்த யானைகள் கேரளாவில் இருந்து மயிலாடும்பாறை வழியாக வருகின்றன. இதில் குட்டிகளுடன் கூடிய 24 யானைகள் கூட்டம் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் நல்லமுடி எஸ்டேட் பகுதிக்கு அருகில் உள்ள வனப்பகுதிக்கு வந்து முகாமிட்டன. அதில் 9 யானைகள் கொண்ட கூட்டம் நல்லமுடி எஸ்டேட் குடியிருப்புக்குள் புகுந்து மகளிர் சுயஉதவிக்குழு ரேசன்கடையை உடைத்து உள்ளிருந்த ரே‌ஷன் அரிசி முழுவதையும் சாப்பிட்டு விட்டு ரே‌ஷன்கடையை சூறையாடின. எஸ்டேட் நிர்வாகத்தினர், தொழிலாளர்கள் மானாம்பள்ளி வனச்சரக வேட்டைத்தடுப்பு காவலர்கள் ஒன்று சேர்ந்து காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டிவிட்டனர். ஆனால் இந்த 9 யானைகளும், வனப்பகுதிக்குள் செல்லாமல் முத்துமுடி எஸ்டேட் தேயிலைத் தோட்ட பகுதியிலேயே முகாமிட்டு வருகின்றன.இதே போல இந்த யானைகள் கூட்டத்தை சேர்ந்த 13 யானைகள் முடீஸ் எஸ்டேட் பஜார் பகுதிக்குள் சென்று கதிரேசன் என்பவரின் மளிகைக்கடையை உடைத்து, அங்கிருந்த பொருட்கள் முழுவதையும் சேதப்படுத்தின. பின்னர் வால்பாறை முடீஸ் சாலை ஓரத்திலிருக்கும் புனிதஅந்தோணியார் ஆலய வளாகத்திற்குள் புகுந்து, மரம் செடிகளை சேதப்படுத்தி விட்டு, ஆலய கதவை உடைத்து உள்ளே புகுந்து அட்டகாசம் செய்தன. இதில் சில சொரூபங்கள் உடைந்தன. ஆலயத்தின் அலங்கார பொருட்கள் வைத்துள்ள அறையின் ஜன்னலை உடைத்து உள்ளிருந்த பொருட்கள் மற்றும் பங்குகுரு ஜார்ஜ் சகாயராஜின் அலுவலக கதவு, ஜன்னலை உடைத்து உள்ளிருந்த பொருட்களை எடுத்து வீசி எறிந்தன. இது குறித்து தகவல் அறிந்ததும், மானாம்பள்ளி வனச்சரக வேட்டைத்தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து யானைகளை விரட்டினர். இதனை தொடர்ந்து யானைகள் அங்கிருந்து கிளம்பி, தோனிமுடி எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தை ஒட்டிய யூக்காலிப்ட்டஸ் காட்டில் முகாமிட்டு நின்று வருகிறது.மேலும் மூன்று யானைகள் நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் முகாமிட்டுநின்று வருகின்றன. தொடர்ந்து யானைக்கூட்டம் கேரள வனப்பகுதிகளிலிருந்து நல்லமுடி, ஹைபாரஸ்ட், நம்பர் பாறை ஆகிய எஸ்டேட் பகுதிகள் வழியாக வந்து கொண்டிருப்பதால் சுற்றுலாபயணிகளை நல்லமுடி பள்ளத்தாக்கு காட்சிமுனை பகுதிக்கு செல்வதற்கு வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர். கேரள வனப்பகுதிகளிலிருந்து வந்த காட்டுயானைகள் கூட்டம் ஒரே நாளிலேயே முடீஸ் பஜார் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதிகளுக்குள் புகுந்து பலத்த சேதங்களை ஏற்படுத்தியது வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த ஆண்டு அதிகப்படியான யானைகள் கூட்டம் வரத்தொடங்கி உள்ளதால், வனத்துறையினர் கூடுதல் வாகன வசதிகளுடன் அதிகப்படியான வனப் பணியாளர்களை பணியில் அமர்த்தி கண்காணிப்பை தீவிரப்படுத்தி எஸ்டேட் பகுதி மக்களுக்கு அதிகப்படியான பாதுகாப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எஸ்டேட் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:– கேரள வனப்பகுதிகளுக்கு சென்ற காட்டுயானைகள் தற்போது கூட்டம், கூட்டமாக வால்பாறை வனப்பகுதிகளுக்கு வரத் தொடங்கி உள்ளன. ஆகவே அனைத்து எஸ்டேட் பகுதி மக்களும் இரவு, அதிகாலை நேரங்களிலும், பணிக்கு செல்லும் போதும் கவனமாக இருக்கவேண்டும். எஸ்டேட் நிர்வாகங்கள் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்கவேண்டும். எரியாத தெருவிளக்குகள் அல்லது கூடுதல் தெருவிளக்குகள் தேவைப்படும் இடங்கள் குறித்து வால்பாறை நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்து போதுமான தெருவிளக்குகள் எரிவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும். எஸ்டேட் பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் இருப்பது தெரிந்தால் உடனே வனத்துறைக்கு எஸ்டேட் நிர்வாகங்களும் தொழிலாளர்களும் தெரிவிக்கவேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.