மாவட்ட செய்திகள்
திருவாடானை யூனியனில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருவாடானை யூனியனில் ஏற்பட்டுள்ள கடும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொண்டி, திருவாடானை யூனியனில் உள்ள 47 ஊராட்சிகளிலும் கடும் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும் பொதுமக்கள் தினமும் பல மைல் தூரம் சென்று நீண்டநேரம் காத்திருந்து தண்ணீர் எடுத்து வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எங்கு பார்த்தாலும் குடிநீருக்காக பிரத்யேகமாக பொதுமக்களே தயாரித்துள்ள தள்ளுவண்டிகளில் குடங்களுடன் பெண்கள் அலைவதை பார்க்க முடிகிறது. இரவு நேரங்களில் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் ஒரு குடம் தண்ணீருக்காக காத்துக்கிடப்பதால் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:– அனைத்து கிராமங்களுக்கும் அதிகாரிகள் குழு நேரில் சென்று அங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்றவாறு குடிநீர் வினியோகம் எவ்வாறு உள்ளது என்பதை கண்டறிய வேண்டும். அதன்பின்னர் அங்குள்ள குடிநீர் ஆதாரங்களை கணக்கில் கொண்டு திட்ட மதிப்பீடு செய்து குடிநீர் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஒவ்வொரு கிராமங்களிலும் தூர்ந்து போய் உள்ள குடிநீர் கிணறுகளை ஆழப்படுத்த வேண்டும். தேவையின் அடிப்படையில் புதிய கிணறுகள் அமைக்க வேண்டும். நீர் ஆதாரங்கள் இருப்பின் சுமார் 1,300 அடி ஆழத்திற்கு புதிய ஆழ்குழாய் அமைக்க வேண்டும். மேலும் குடிநீர் குழாய்கள் உடைப்புகளை சரி செய்ய ஊராட்சிகளுக்கு உடனடியாக நிதி வழங்க வேண்டியது அவசியமாகும்.ஒவ்வொரு ஊராட்சியிலும் குடிநீர் பணிகளை மேற்கொள்வதற்கு போதிய நிதி இல்லாமல் சிரமங்கள் இருந்து வருகிறது. பெயரளவில் தேவையற்ற குடிநீர் பணிகளை செய்வதை தவிர்த்து தேவையானவற்றுக்கு நிதி ஒதுக்கி அவற்றை வீணாக்கி விடாமல் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்த வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்களை முடுக்கி விட்டு குடிநீர் தட்டுபாட்டை போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.