அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்காத அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ரேஷன் கார்டை மாற்றிக் கொள்ளலாம்

ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்காத அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் ரேஷன் கார்டுகளை அதற்கேற்ற வகையில் மாற்றிக் கொள்ளுமாறு கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவுரை வழங்கியுள்ளார்.

Update: 2018-09-05 21:30 GMT
தேனி,

தேனி மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 82 ஆயிரத்து 507 ரேஷன் கார்டுகள் உள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 517 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கார்டுதாரர்களுக்கு மாதாந்திர பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெரும்பாலும் ரேஷன் அரிசி வாங்குவது கிடையாது.

இதனால், ரேஷன் கடைக்காரர்கள் சிலர் அரிசி வாங்காதவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாகவும், இவ்வாறு விற்பனை செய்யப்படும் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்லப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.ரேஷன் அரிசி கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

ரேஷன் கடைகளில் மாவட்ட வழங்கல் அலுவலர், வட்ட வழங்கல் அலுவலர்கள் மூலம் தொடர் தணிக்கைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு ரேஷன் அரிசி தேவையில்லை என்றால் தங்களின் கார்டுகளை அதற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளுமாறு கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவுரை வழங்கியுள்ளார்.

இதையடுத்து ஒவ்வொரு துறையை சேர்ந்த மாவட்ட அதிகாரிகளும் தங்களின் துறையின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்களுக்கு இதுகுறித்த அறிவிப்பை தெரியப்படுத்தி வருகின்றனர். ரேஷன் அரிசி தேவையில்லை என்று விரும்பினால் சர்க்கரை அட்டையாகவோ, எந்த பொருளும் வேண்டாத அட்டையாகவோ மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவுரைகள் வழங்கி உள்ளனர்.

இந்த அறிவுரையை சுட்டிக்காட்டி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து ஒரு சுற்றறிக்கையும், அதோடு ரேஷன் கார்டை மாற்றிக் கொள்வதற்கான படிவத்தையும் இணைத்து அனுப்பி வைத்துள்ளார்.

பொருட்களை விட்டுக் கொடுக்கவோ அல்லது அரிசி இல்லாமல் சர்க்கரை மட்டும் பெற்றுக் கொள்ளும் அட்டையாக மாற்றிக் கொள்ளவோ விரும்பும் ஆசிரியர்கள் இதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றும் தேனி மாவட்டத்தில் 10 பேர் மட்டுமே இதுவரை படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பி உள்ளதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்