மாவட்ட செய்திகள்
பொதுமக்களின் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடைகள் திறப்பு

பொதுமக்களின் கடும் எதிர்ப்பை மீறி தேனி நகருக்குள் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. சாலையோர தள்ளுவண்டி கடைகளும் அதிகரித்துள்ளது.
தேனி,


தேனி நகரில் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. நெடுஞ்சாலையோரங்களில் இருந்த டாஸ்மாக் கடைகள் அகறப்பட்ட போது, தேனி பழைய பஸ் நிலையம், உழவர் சந்தை, சுப்பன்தெரு போன்ற பகுதிகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன.

காட்டுபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் பாதையில் இருந்த டாஸ்மாக் கடைக்கு நுழைவு வாயில் மாற்றி அமைக்கப்பட்டு அதே இடத்தில் கடை செயல்பட்டது. நகருக்குள் இருந்த டாஸ்மாக் கடைகள் மாற்றப்பட்டு, புறவழிச்சாலையிலும், கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையம் அருகில் உள்ள திட்டச்சாலையிலும் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், மீண்டும் நகருக்குள் டாஸ்மாக் கடைகள் அமைக்க முயற்சிகள் நடந்து வந்தன. இதற்கு பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், மக்களின் எதிர்ப்புகளை எல்லாம் மீறி நகருக்குள் படிப்படியாக டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

உழவர் சந்தை அருகிலும், பழைய பஸ் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் ராஜவாய்க்கால் கரையோரமும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. பின்னர், சுப்பன்தெரு பகுதியிலும் சில மாத இடைவெளியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதன்தொடர்ச்சியாக பழைய பஸ் நிலையம் எதிரே அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது.

இதனால், தேனி நகருக்குள் மீண்டும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதன் தாக்கமாக சுப்பன்தெரு, மதுரை சாலை, பெரியகுளம் சாலை, உழவர்சந்தை சாலை உள்ளிட்ட இடங்களில் சாலையோர தள்ளுவண்டி கடைகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தள்ளுவண்டிகளில் மீன், கோழி இறைச்சி போன்றவை எண்ணெய்யில் பொறித்து கொடுக்கப்படுகிறது. இதில் மிஞ்சும் எலும்புத் துண்டுகளுக்காக சாலையோரம் தெருநாய்களும் அதிக அளவில் உலா வரத் தொடங்கி உள்ளன. டாஸ்மாக் கடைகளால் மக்களுக்கும், தெருநாய் களால் வாகன ஓட்டிகளுக்கும் மீண்டும் பரிதவிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிற இடங்களில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்றும், புதிதாக வேறு கடைகளை நகருக்குள் அமைக்கக்கூடாது என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.