ஒர்க்‌ஷாப்பில் பயங்கர தீ; 12 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்

பழனியில், நள்ளிரவு வேளையில் ஒர்க்‌ஷாப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 12 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்துக்கு சிலரது நாசவேலை காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-09-05 21:30 GMT
பழனி, 


பழனி-உடுமலை ரோட்டில் பாலாஜி மில் ரவுண்டானா அருகே, அதே பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருக்கு சொந்தமான ஒர்க்‌ஷாப் (இருசக்கர வாகன பழுது நீக்கும் கடை) செயல்பட்டு வருகிறது. இங்கு பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களை பழுது நீக்குவதற்காக கொடுப்பார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில், அந்த ஒர்க்‌ஷாப்பில் திடீரென தீப்பற்றியது.

சிறிது நேரத்தில் ஒர்க்‌ஷாப் முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் கமலக்கண்ணன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் ஒர்க்‌ஷாப்பில் பரவிய தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் ஒர்க்‌ஷாப் முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 12 மோட்டார் சைக்கிள்களும் முழுமையாக எரிந்து நாசமாகின. இதற்கிடையே ஒர்க்‌ஷாப் தீப்பற்றியது குறித்து தகவலறிந்து அங்கு வந்த ஆனந்தராஜ் ஒர்க்‌ஷாப் முழுமையாக எரிந்து நாசமானதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இதுகுறித்து பழனி நகர் போலீசில் அவர் புகார் அளித்தார். அதில், எனது அண்ணன் கனகராஜ் பா.ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளராக உள்ளார். அவருக்கு கடந்த சில நாட்களாகவே கொலை மிரட்டல் வருகிறது. எனவே அவருடைய விரோதிகள் யாரேனும் எனது ஒர்க்‌ஷாப்புக்கு தீ வைத்திருக்கக்கூடும்.

இந்த நாசவேலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அந்த புகாரின் பேரில் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்துக்கு நாசவேலை காரணமா? அல்லது மின்சார கோளாறு காரணமாக தீப்பற்றியதா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்