ராமநாதபுரத்தில் தாறுமாறாக ஓடிய அரசு பஸ்சால் பரபரப்பு

ராமநாதபுரத்தில் நேற்று தாறுமாறாக ஓடிய அரசு பஸ்சால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பஸ்சை பயணிகள் சிறைபிடித்ததால், டிரைவர் தப்பியோடினார்.

Update: 2018-09-05 22:00 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு நேற்று மதியம் இடைநில்லா பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் கண்டக்டராக ராமரும், டிரைவராக இளங்கோ என்பவரும் வந்தனர். பஸ்சில் 40–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ் நிலையத்தில் இருந்து கிளம்பியதும், அந்த வழியாக சென்ற கார் மீது மோதுவது போல் பஸ் சென்றதால் பயணிகள் திடுக்கிட்டனர். இதனைத்தொடர்ந்து அந்த பஸ் ரோமன் சர்ச் பகுதியில் சென்றபோது மற்றொரு கார் மீது உரசியபடி சென்றது. அப்போது அந்த காரின் கண்ணாடி உடைந்ததாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து விபத்துகளை சந்தித்து தப்பிய நிலையில் கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாக பஸ் சென்றனர். இதனால் அந்த பஸ்சில் வந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கூச்சலிட்டு பஸ்சை நிறுத்தினர்

பயோனியர் ஆஸ்பத்திரி அருகில் பஸ்சை நிறுத்தியலும், அதில் வந்த பஸ் டிரைவர் இளங்கோ அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. பின்னர் பஸ்சை சிறைபிடித்து பயணிகள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ராமநாதபுரம் பணிமனை கிளை மேலாளர் பத்மகுமார் விசாரணை நடத்தினார். அவரிடம் பயணிகள் டிரைவர் மது அருந்திவிட்டு பஸ்சை ஓட்டி வந்ததாக குற்றம்சாட்டினர்.

அப்போது கிளை மேலாளர் பத்மகுமார், புதிய பஸ்சாக இருப்பதால் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், பணி ஒதுக்கீட்டின் போது டிரைவர் நல்ல நிலையில் இருந்ததால் பஸ் இயக்க அனுப்பி வைக்கப்பட்டதாகவும் உறுதியுடன் கூறினார். இருப்பினும், டிரைவர் இளங்கோவை நேரில் வரச்சொல்லி உள்ளதாகவும், விசாரித்து தவறு நடந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆனால் மது அருந்தாவிட்டால் பஸ்சை நிறுத்தியதும் டிரைவர் இளங்கோ தப்பி ஓடியது ஏன் என்று பயணிகள் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ராமநாதபுரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த பஸ்சில் இருந்த பயணிகள் வேறு பஸ்களில் மாற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்