மாவட்ட செய்திகள்
பெண் சப்-இன்ஸ்பெக்டரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற டிரைவர் கைது

செஞ்சியில் மணல் கடத்தலை தடுத்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி, 

செஞ்சி பகுதியில் மாட்டு வண்டி மற்றும் டிராக்டர்கள்மூலம் மணல் கடத்தல் நடைபெறுவதாக ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து முக்கிய சந்திப்புகளில் போலீசார் வாகன தணிக்கை செய்தும், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டும் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் செஞ்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் இருந்தனர். அப்போது களையூர் பஸ் நிறுத்தம் அருகே வந்துகொண்டிருந்த டிராக்டரை சோதனை செய்வதற்காக போலீசார் நிறுத்த முயன்றனர். அப்போது அந்த டிராக்டர் நிற்காமல் சப்-இன்ஸ்பெக்டர் விஜயா மீது மோதுவதுபோல் வந்தது. இதில் சுதாரித்துக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் விஜயா விலகி உயிர் தப்பினார்.

இதையடுத்து அங்கே நின்ற போலீசார் அந்த டிராக்டரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். இதில் மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்ய முயன்றதாக செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டர் டிரைவரான களையூரை சேர்ந்த ராமலிங்கம் மகன் சிலம்பரசன் (வயது 24) என்பவரை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.