மாவட்ட செய்திகள்
தொழிலாளர்கள் பெயரில் கோடிக்கணக்கில் கடன் பெற்று மோசடி: வங்கி அதிகாரிகள் சிக்குகிறார்கள் போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணை

விருதுநகர் பருப்பு மில் அதிபர்கள் தொழிலாளர்கள் பெயரில் கோடிக்கணக்கில் வங்கி கடன் பெற்று மோசடி செய்ததற்கு உதவிய வங்கி மற்றும் அரசு அதிகாரிகள் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.
விருதுநகர், விருதுநகரை சேர்ந்த பருப்பு மில் அதிபர்கள் வேல்முருகன் (வயது 65), செண்பகன் (55). இவர்கள் இருவரும், தங்கள் ஆலையில் வேலை செய்த பல தொழிலாளர்களுக்கு ஆயுள் காப்பீடு செய்வதாக கூறி சில ஆவணங்களில் கையெழுத்து பெற்றதாக கூறப்படுகிறது.அந்த ஆவணங்களை பயன்படுத்தி தேனி மாவட்டம் பெரியகுளம், நிலக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள அரசு வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.அவ்வாறு கடன் பெற்றவர்களில் சிலர் மன உளைச்சலுக்கு ஆளானதுடன், மர்மமான முறையில் இறந்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது. இதுதொடர்பாக தேனி மாவட்டம் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த மோசடி தொடர்பாக பருப்பு மில் அதிபர்கள் வேல்முருகன், செண்பகன், ஊழியர் கலைச்செல்வி, தரகர்கள் சோலைராஜ், சன்னாசி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் தொடர்புடையதாக கூறப்படும் செண்பகனின் மகள் இந்துமதி மற்றும் அவரது கணவர் விமல்குமார் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரியவருகிறது.போலீசார் விசாரணையில், தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் சார்பில் வேல்முருகனுக்கும், செண்பகனுக்கும் விளை பொருட்களுக்கான கடன் வழங்கலாம் என்று இருப்பு சான்றிதழ் வழங்கப்பட்டதாவும், அதன் அடிப்படையில்தான் வங்கி அதிகாரிகள் தொழிலாளர்களின் பெயரில் வங்கி கடன் பெற உதவியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.எந்தெந்த தொழிலாளர்கள் பெயரில் கடன் வாங்கப்பட்டு இருக்கிறதோ, அந்த கடனுக்கு வட்டி செலுத்தப்படாததால் தற்போது வட்டியுடன் சேர்த்து கடன் தொகையை செலுத்தும்படி வங்கி சார்பில் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. அதன் பின்னரே இந்த மோசடி பூதாகரமாகி வருகிறது.மேலும் விசாரணையில், பருப்புமில் அதிபர்களுக்கு தொழிலாளர்கள் பெயரிலான கடன் கிடைக்க வங்கி அதிகாரிகள் சிலர் இரவு 10 மணி வரை வங்கியில் இருந்து வேலை பார்த்துள்ளனர்.இந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் வங்கி அதிகாரிகள் வேலை செய்து, பருப்பு மில் அதிபர்களுக்கு கடன் கொடுக்க பின்னணி என்ன? விண்ணப்பங்களை முறையாக ஆய்வு செய்யாமல் உடனடியாக வங்கிக்கடன் அனுமதித்த அதிகாரிகள் யார்–யார்? என்பது பற்றி ஆவணங்களின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.விரைவில் இந்த அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை பாயும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் அரசு அதிகாரிகளும் இந்த சதிக்கு துணை போயிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த மோசடி தொடர்பாக பல வங்கி மற்றும் அரசு அதிகாரிகள் சிக்குவார்கள் என தெரிகிறது.மில் அதிபர்களின் மோசடி வலையில் சிக்கிய விருதுநகர் பாலாஜி நகரை சேர்ந்த தொழிலாளி ஒருவர் கூறியதாவது:–‘‘பருப்பு மில் அதிபர்கள் கொடுத்த ஆயிரம் ரூபாய்க்காக அவர்களிடம் தனது ஆதார் கார்டை கொடுத்தேன். வங்கி கணக்கே இல்லாத எனக்கு ஒரே நாளில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தேன். அதன் பின்னர் சில மாதங்களில் எனது வங்கி கணக்கில் எனது பெயரில் ரூ.25 லட்சம் கடன் உள்ளதாகவும், அந்த தொகையை கட்டுமாறு நோட்டீஸ் வந்ததால் அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக பருப்பு மில் அதிபர்களிடம் சென்று அதுபற்றி கேட்டேன். அப்போது அவர்கள் முறையான பதில் ஏதும் சொல்லாமல் என் மீது போலீசில் புகார் செய்தனர். போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டேன். இப்போது கடனுக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்து வருகிறேன். இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்“இவ்வாறு அவர் கூறினார்.இதே போன்றுதான் மோசடியில் சிக்கிய மற்ற தொழிலாளர்களின் குடும்பத்தினரும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதே போன்று வேறு வங்கிகளிலும் இம்மாதிரியான மோசடிகளை பருப்பு மில் அதிபர்கள் அரங்கேற்றி உள்ளனரா? என்பது குறித்தும் மறுபுறம் விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். எனவே இந்த மோசடியில் உள்ள மர்ம முடிச்சுகள் இன்னும் ஓரிரு நாளில் அவிழும் என எதிர்பார்க்கப்படுகிறது.